புதுடில்லி : குழந்தைகளை யார் பராமரிப்பது என்று வழக்குத் தொடுத்துள்ள பெற்றோருக்கு எதிராக, அந்தக் குழந்தைகளே சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ள விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு ஒரு மகன் (16), ஒரு பெண் (11) என்று இரண்டு குழந்தைகள். தம்பதியர் விவாகரத்து கோரி கனடா நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். விவாகரத்து கிடைத்தது. பின், குழந்தைகளை யார் பொறுப்பில் ஏற்றுக் கொள்வது என்பதில் பிரச்னை வந்தது.இதற்கிடையில், விவாகரத்து பெற்ற பின், 2006ல் மனைவி இந்தியாவுக்குத் திரும்பி விட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் குழந்தைகள் இருவரும் இந்தியாவுக்கு வந்து விட்டனர். தாய்வழி தாத்தாவோடு சென் னையில் வாழத் தொடங்கினர்.இந்நிலையில், அக்குழந்தைகள் மீண்டும் கனடா செல்ல வேண்டும் என, தாய் வற்புறுத்தினார். கனடா நாட்டு கோர்ட் தீர்ப்பின்படி அவர்கள் இந்தியாவில் நீண்டகாலம் தங்க முடியாது என்று அவர் பயந்ததுதான் அதற்குக் காரணம்.இதை எதிர்த்து அக்குழந்தைகள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தனர்.
அவர்கள் தங்கள் மனுவில், “அப்பா அமெரிக்காவில் வேலை பார்த்தபோது, நாங்கள் கனடாவில் எங்கள் அப்பாவழி தாத்தா பாட்டியோடுதான் வாழ்ந்தோம். இப்போது நாங்கள் எங்கள் படிப்பை குர்கானில் தொடர விரும்புகிறோம். எங்கள் தாயார் எங்களைக் கனடாவுக்குச் செல்ல வற்புறுத்துகிறார். அதோடு எங்கள் தாய்வழி தாத்தாவோடுதான் வசிக்க விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
குழந்தைகளின் வக்கீல் ஷாலினி கவுல் கூறுகையில்,”இவர்கள் தங்கள் தாய்வழி தாத்தாவோடு வசிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது’ என்று தெரிவித்தார்.
கோர்ட் தனது தீர்ப்பில்,”அவர்களின் படிப்பைத் தொடர அவர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதால், அடுத்த தீர்ப்பு வரும் வரை அவர்கள் இந்தியாவிலேயே தங்கலாம் என்று அறிவுறுத்துகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.குழந்தைகள் இருவரும் தங்களின் பெற்றோர், தங்களை யார் பொறுப்பில் எடுப்பது என்பது குறித்து வழக்குத் தொடர்ந்ததை எதிர்த்து வருகின்றனர். 2009ல் கனடா கோர்ட், குழந்தைகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. குழந்தைகள் அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 2010, ஜனவரியில் சென்னை ஐகோர்ட், குழந்தைகள் கனடா செல்வதற்குத் தடை விதித்து விட்டது.
Leave a Reply