மதுரை: “”பெற்றோர் – தனியார் பள்ளிகள் ஏற்கும் வகையில், கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்,” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை, இலவச நிலம் வழங்குவதாக தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சி அமைத்தது. நான்கு ஆண்டுகளாகியும் இலவச நிலம் வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி ஆக.,15 முதல் மக்கள் இயக்கம் நடத்தப்படும். நதி நீர் பிரச்னைகளில் தமிழக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. ஆற்று மணல் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி. சமூகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தவிர்க்க முடியாதவை. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும் நிலையுள்ளது. கல்வி கட்டண நிர்ணய குழுவில் தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். பெற்றோர், தனியார் கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
மாற்றுப்பாதையில் செல்ல மறுத்த கிருஷ்ணசாமி : உசிலம்பட்டி வழியாக செல்லமால் மாற்று பாதையில் செல்லுமாறு போலீசார் கூறியதை ஏற்க மறுத்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போலீஸ் பாதுகாப்புடன் அதே பாதையில் அழைத்துச் செல்லப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் க.விலக்கு அருகே நடந்த விபத்தில் ஆண்டிபட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 11பேர் பலியானார்கள். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக பொம்மிநாயக்கன் பட்டி செல்ல திட்டமிட்டிருந்தார். சென்னையில் இருந்து அவர் நேற்று மதுரை வந்தார். இவரது வருகையையொட்டி நேற்று மதியம் முதல் மாவட்ட எஸ்.பி., மனோகர் தலைமையில் நான்கு இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலை, நான்குவழிச்சாலை சந்திப்பில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 3.30 மணியளவில் கிருஷ்ணசாமி பொம்மிநாயக்கன்பட்டிக்கு புறப்பட்டார். அப்போது சமயநல்லூர் டி.எஸ்.பி. சுருளிராஜா “உசிலம்பட்டி வழியாக சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே வாடிப்பட்டி வழியாக மாற்றுப்பாதையில் செல்லுமாறு’ அவரிடம் கூறினார். இதை ஏற்க மறுத்த அவர் “திட்டமிட்டபடி உசிலம்பட்டி வழியாகத்தான் செல்வேன்’ என்று கூறினார். இதில் முடிவு ஏற்படாததால் அவரது பயணம் தாமதமானது. இரவு 7 மணி வரை உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு “கிருஷ்ணசாமியுடன் வந்தவர்களை கோஷம் எதுவும் எழுப்பக்கூடாது’ என்று கட்டுப்பாடு விதித்து தனித்தனியாக ஆண்டிபட்டிக்கு பாதுகாப்புடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
நான்குவழிச்சாலை சந்திப்பிற்கு இரவு 7.40 மணியளிவில் கிருஷ்ணசாமி வந்தார். அவரது கார் பலத்த பாதுகாப்புடன் ஆண்டிபட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டது. பொம்மிநாயக்கன்பட்டிக்கு சென்ற அவர் அங்கு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, க.விலக்கில் உள்ள தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இரவு தேனியில் தங்கினார்.
Leave a Reply