பெற்ற மகன் மீது தாய்க்கு பயம் : கோர்ட்டுக்கு வந்தார் மூதாட்டி

posted in: கோர்ட் | 0

கோவை : “சொந்தமாக சம்பாதித்த சொத்தில், உறவுகள் பங்கு கேட்டு தொந்தரவு செய்வதால், கடைசி காலத்தில் அமைதியாக வாழ பாதுகாப்பு வேண்டும்’ எனக் கோரி, 80 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கில், கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை, என்.ஜி.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் ராணிராசாமணி(80); ஓய்வு பெற்ற மாநகராட்சி பள்ளி ஆசிரியை. இவரது கணவர் ராமையா; ஹெல்த் இன்ஸ்பெக்டராக பணியாற்றி 1991ல் ஓய்வு பெற்று, 2000ல் இறந்து விட்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள்; அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. “ஓய்வூதியம் பெற்று தனிமையில் வசிக்கும் எனக்கு, மகன், மருமகள் தொந்தரவு செய்யக்கூடாது; கடைசி வரை நிம்மதியாக வாழ போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிட வேண்டும்’ என, கோர்ட்டில் இவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மூதாட்டி தாக்கல் செய்துள்ள மனு விவரம்: கடந்த 1950ல் எனக்கும், என் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த ராமையாவுக்கும் திருமணம் நடந்தது. மூன்று மகன், ஒரு மகள் பிறந்தனர். 1957ல் எனக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. காந்திபுரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். 1962ல் அரசு ஊழியர்களுக்காக என்.ஜி.ஜி.ஓ., காலனி உருவாக்கப்பட்டது. எங்கள் இருவரின் சேமிப்பு மற்றும் நகையை விற்று 500 ரூபாய்க்கு இடம் வாங்கி, 1969ல் வீடு கட்டி குடியேறினோம். எங்களது குழந்தைகள் படித்து, இன்று இன்ஜினியர், டாக்டராக பல்வேறு இடங்களில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். எனது கணவர் 1991ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு கிடைத்த ஓய்வூதியத்தால் மேலும் இரு அறைகள் கட்டப்பட்டன. இந்த வீடு கட்ட, இருவரும் சேர்ந்தே கடன் வாங்கினோம். இது கணவன், மனைவி இருவரின் பெயரில் உள்ள சொத்தாகும். கணவர் இறந்த பின், என் மகன்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சொத்து கேட்டு, கோவை மாவட்ட தலைமை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு தற்போது மேல் கோர்ட் விசாரணையில் உள்ளது.

குறிப்பிட்ட சொத்தில் எனக்கு பாதி பங்கு உண்டு. அதுபோக, கணவரின் சொத்திலும் ஐந்தில் ஒரு பங்கு எனக்கு சேர வேண்டும். இப்படி இருக்கும் போது, சொத்தில் ஒரு மகன் மட்டும் சொந்தம் கொண்டாடுவதில் நியாயம் இல்லை. வயதான காலத்தில் மாத்திரை மற்றும் கடவுளின் கருணையால் வாழ்ந்து கொண்டுள்ளேன். எனது இறுதிகாலத்தை நிம்மதியாக, மரியாதையாக கழிக்க விரும்புகிறேன். இதில் யாருடைய தலையீடும் வேண்டாம். மகனின் தேவையற்ற நடவடிக்கையால் மனமுடைந்துள்ளேன். என்னை வீட்டை விட்டு வெளியேற்ற சட்டவிரோத நடவடிக்கை நடந்து வருகிறது. எனவே, எனது புகாரை விசாரித்து, கடைசி வரை அமைதியான வாழ்க்கை வாழ வேண்டியும், மகனின் தொந்தரவில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் துடியலூர் போலீசுக்கு உத்தரவிட வேண்டும், என மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த ஜே.எம்.எண்: கோர்ட் மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி, “மூதாட்டிக்கு யாரும் எவ்வித தொந்தரவும் தரக்கூடாது. யாரேனும் இடையூறு செய்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 1க்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *