மருத்துவம் படிக்க மாணவியருக்கே ஆர்வம் அதிகம்

posted in: கல்வி | 0

7102சென்னை : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளை படிக்க, மாணவர்களை விட மாணவியருக்கே ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது.

இந்தாண்டு மருத்துவ படிப்புகளுக்கு ஆண்களை விட பெண்கள், இரு மடங்கு அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த 18 ஆயிரத்து 115 மாணவர்களுக்கு, பிரத்யேக, ‘ரேண்டம்’ எண் வழங்கப்பட்டுள்ளது. தர வரிசைப் பட்டியல், 12ம் தேதி வெளியாக உள்ளது. திருவாரூர், விழுப்புரம் கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,483 எம்.பி.பி.எஸ்., இடங்களும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 348 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 778 பி.டி.எஸ்., இடங்களும் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன.

மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள், மே மாதம் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை வழங்கப்பட்டன. மொத்தம் 18 ஆயிரத்து 232 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், ஒன்றிற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்த 117 பேரின் இரண்டாவது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.இதையடுத்து, மீதமுள்ள 18 ஆயிரத்து 115 மாணவர்களுக்கு, நேற்று பிரத்யேக பத்து இலக்க, ‘ரேண்டம்’ எண் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி இயக்குனர் விநாயகம், மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மருத்துவப் படிப்பிற்கு கடந்த ஆண்டு 14 ஆயிரத்து 321 பேர் விண்ணப்பித்தனர். இதில் 384 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 13 ஆயிரத்து 937 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 5,064 பேர்(36.33%) ஆண்கள்; 8,873 பேர்(63.67%) பெண்கள்.இந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கு 18 ஆயிரத்து 115 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4,178 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.பரிசீலனையில் உள்ள 18 ஆயிரத்து 115 விண்ணப்பங்களில், 6,422 பேர்(35.45%) ஆண்கள்; 11 ஆயிரத்து 693 பேர்(64.55%) பெண்கள். மருத்துவப் படிப்பிற்கு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஆண்களை விட, பெண்கள் இரண்டு மடங்கு விண்ணப்பித்துள்ளனர்.

மருத்துவக் கல்வி இயக்குனர் விநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல் 12ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். ஜூன் 21ம் தேதி முதல் முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் துவங்கும் என்ற தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதால், மருத்துவக் கவுன்சிலிங்கிற்கு மாணவர்கள் போக்குவரத்தில் பிரச்னை ஏற்படுமா என, அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.

அரசின் முடிவைப் பொறுத்து, தேவைப்பட்டால், கவுன்சிலிங் தேதி மாற்றப்படலாம்.இந்த ஆண்டு எம்.சி.ஐ., 93 புது மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கிய அனுமதியை, மத்திய அரசு அமைத்த ஆறு பேர் குழு ஆய்வு செய்து வருகிறது. இக்கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் நேரடி ஆய்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக, குழுவிற்கு மூன்று பேர் என, மொத்தம் 129 பேர் கொண்ட 43 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்களில் முந்தைய எம்.சி.ஐ., குழுக்களில் இடம் பெற்றவர்களுக்கு பதிலாக, மத்திய அரசு மருத்துவமனைகள், மத்திய பல்கலைக் கழகங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகளையும் இக்குழு ஆய்வு செய்யவுள்ளது. ஆய்வின் முடிவில், இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைத்து விடும் என நம்புகிறோம்.மத்திய அரசின் குழுவே இறுதியானது என்பதால், எம்.சி.ஐ., அனுமதியைப் போல, அதன்பிறகு மத்திய அரசுக்கு செல்ல வேண்டியதில்லை. இக்குழு அனுமதி வழங்கினால், நேரடியாக கல்லூரியை துவக்க முடியும். இவ்வாறு விநாயகம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *