சென்னை : இரு கால்கள் பாதிக்கப்பட்ட, நூறு மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களையும், பார்வையற்ற மாணவர்களுக்கு, “சிடி பிளேயர்’களையும் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.
மேலும், உண்ணாவிரதம் இருந்த பார்வையற்றவர்களுக்கு, ஆசிரியர் பணி நியமன உத்தரவுகளையும் முதல்வர் வழங்கினார். மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் கோரி விண்ணப்பித்த, மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், கடந்த ஆண்டுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில், பேட்டரியில் இயங்கும் 761 மூன்று சக்கர வாகனங்களை வழங்க, முதல்வர் கருணாநிதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இதில் முதல் கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவியருக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.
இதேபோல, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு, “டேப் ரிக்கார்டர்’ மற்றும் கேசட்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, முதல் முறையாக, பார்வையற்ற 124 மாணவ, மாணவியருக்கு 3 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில், “சிடி பிளேயர்’ மற்றும் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட “சிடி’க்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக, அரசு சிறப்பு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வரும், பார்வையற்ற 50 மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு, “சிடி பிளேயர்’ மற்றும் “சிடி’க்களை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.
பூந்தமல்லியில் உள்ள, அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த, 72 பேருக்கு வேலை வழங்க கோரி, உண்ணாவிரதம் இருந்த மாற்றுத் திறனாளிகளை, மருத்துவமனையில் சென்று முதல்வர் பார்வையிட்டார். பணி நியமனங்கள் வழங்கப்படுமென அப்போது முதல்வர் உறுதியளித்தார். அதன்படி, இடைநிலை பயிற்சி முடித்த அந்த 72 மாற்றுத் திறனாளிகளில், ஆசிரியர் பணிக்குத் தகுதி வாய்ந்த 60 பேருக்கு, தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை, முதல்வர் வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் குற்றாலிங்கம், நிதித்துறை முதன்மைச் செயலர் சண்முகம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஜவகர், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் விஜயராஜ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Leave a Reply