தஞ்சாவூர்:””நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய சட்டசபை வளாகத்தில் கூட்டம் நடத்தப்பட மாட்டாது; பழைய வளாகத்திலேயே கூட்டம் நடத்தப்படும் என்று கூறிய ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து தான் பேசுகிறார்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின், தஞ்சை திருமண விழாவில் பேசினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தஞ்சை வந்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், ஓட்டல் சங்கத்தில் ஓய்வெடுத்த துணை முதல்வர் ஸ்டாலின், அங்கே ஒரத்தநாடு நகர அவைத் தலைவர் செல்வராஜன் மகன் இளங்கோவன் – ஆர்த்தி திருமணத்தை ஐந்து நிமிடங்களில் நடத்தி வைத்தார்.
பின், தஞ்சை மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவர் செல்வம் மகன் கதிரவன் – துர்காதேவி திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைப்பதில் பெருமை அடைகிறேன். இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதையுடன் நடப்பதை சட்டம் அங்கீகரிக்கிறது.தமிழ் மொழிக்கு மாபெரும் சிறப்பாக செம்மொழி அந்தஸ்தை முதல்வர் கருணாநிதி பெற்றுத் தந்தார். தற்போது, செம்மொழியான தமிழுக்கு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை மாநாடு நடத்தி பெருமை சேர்க்கப் போகிறார்.டில்லியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் லோக்சபாவுக்கு உள்ளே என்ன வார்த்தைகளால் பேசிக் கொண்டாலும், லோக்சபாவுக்கு வெளியே ஒன்றாகக் கூடிப் பேசுவர். அந்த பண்பாட்டை கருணாநிதி கொண்டுள்ளார்.
கலைஞர் வீட்டு வசதி திட்ட துவக்க விழாவின் போது, அ.தி.மு.க., – பா.ம.க., உட்பட அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பும் முன், விழாவில் பங்கேற்க ஒப்புதல் கோரி நானே கடிதம் எழுதினேன்.”தனக்கு வேறு முக்கிய பணி இருப்பதாகவும், தன்னால் வர இயலாது’ என, ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். என்ன பணி என எனக்கு தெரியாது. ஆனால், அன்று அவர் கோடநாட்டில் இருந்தார். இதை கேலிக்காக சொல்லவில்லை. புதிய சட்டசபை திறப்பு விழாவுக்கும் அழைப்பு அனுப்பினோம்; அதற்கும் அவர் வரவில்லை.மாறாக, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய சட்டசபை வளாகத்தில் கூட்டம் நடத்தப்பட மாட்டாது; பழைய வளாகத்திலேயே கூட்டம் நடத்தப்படும்’ என, அறிவிக்கிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து தான் இதுபோல பேசி வருகிறார்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Leave a Reply