மும்பை: தனது மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி மீது தான் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி.
2008ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு முகேஷ் அளித்த பேட்டியில் தம்மை தரக்குறைவாக பேசியதாகவும் இந்த செய்தி இந்திய பத்திரிகைகளில் வெளியாகி தனக்கு அவப்பெயரை தேடித் தந்ததாகவும் அனில் வழக்கு தொடர்ந்தார்.
இதனால் ரூ.10,000 கோடி கேட்டு முகேஷ் அம்பானி மீது மும்பை நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார் அனில் அம்பானி. அனில் தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் இவ்விரு பத்திரிகைகளும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தன.
வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
எம்டிஎன் விவகாரம்…
தென்னாப்பிரிக்காவின் எம்டிஎன் நிறுவனத்தின் பங்குகளை அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாங்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. அப்போது முகேஷ் அம்பானி குறுக்கிட்டு இதற்கு இடையூறு செய்தார். எம்டிஎன் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்குத்தான் உரிமை உள்ளது என்று கூறி அந்நிறுவனத்துக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து இந்நிறுவனத்தைக் கையகப்படுத்தும் முடிவை அனில் அம்பானி கைவிட்டார். இந்நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவும் அப்போது நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த மாதம் தங்களிடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைந்து சமரசமாக செயல்பட இரு சகோதரர்களும் முடிவு செய்தனர்.
முதல் கட்டமாக இருவரும் எந்த துறையில் வேண்டுமானாலும் ஈடுபடலாம் என்ற முடிவுக்கு ஒப்புக் கொண்டனர். இரு சகோதரர்களும் தந்தையின் மறைவுக்குப் பிறகு 2005ம் ஆண்டு பிரிந்தனர். அப்போது, ஒருவர் மற்றொருவர் ஈடுபட்டுள்ள தொழிலில் இறங்கக் கூடாது என ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
தற்போது இருவரிடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை முதலில் ரத்து செய்தனர்.
இதைத் தொடர்ந்து மீண்டும் அனிலின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் பேச்சுக்களைத் துவங்கியுள்ளது எம்டிஎன் நிறுவனம்.
Leave a Reply