சென்னை : அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் இன்று துவங்கியது.
எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள், மே 17 – 31ம் தேதி வரை வழங்கப்பட்டன. மருத்துவப் படிப்பிற்கு 18 ஆயிரத்து 131 பேர் விண்ணப்பித்தனர். இதில் 6,423 பேர் ஆண்கள்; 11 ஆயிரத்து 708 பேர் பெண்கள். விண்ணப்பித்தவர்களில் 17 ஆயிரத்து 610 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த ஆண்டு முதல் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும், குடும்பத்தில் முதல் தலைமுறை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் இந்த கட்டணச் சலுகையைப் பெற, 6,440 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் இன்று துவங்குகிறது. இன்று காலை 9 மணிக்கு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், உடல் ஊனமுற்றோர், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
இன்று மதியம் 1 மணிக்கு, பொதுப் பிரிவில் 1 – 79 “ரேங்க்’ பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில், 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 இடங்கள் நிரப்பப்படுகின்றன. ஓ.சி., பிரிவில் 433 இடங்கள், பி.சி., 370, பி.சி., முஸ்லிம் 49, எம்.பி.சி., 280, எஸ்.சி., 210, எஸ்.சி., அருந்ததியினர் 42, எஸ்.டி., 14 இடங்கள் உள்ளன.
முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங், ஜூலை 2ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கவுள்ளது. முதற்கட்ட கவுன்சிலிங்கிற்கு 1,500 பேர் அழைக்கப்படுகின்றனர்.
இரண்டாம் கட்ட மருத்துவக் கவுன்சிலிங், ஜூலை 3வது வாரத்தில் நடக்கவுள்ளது. தர்மபுரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்த பிறகு, இரண்டாம் கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கின் போது, இக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரப்பப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும்.
Leave a Reply