கோவை : தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறினார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய கோவை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், அண்மையில் ஏற்பட்ட லைலா புயல் காரணமாக காற்றாலை மின்சாரம் அதிகளவில் கிடைத்தது. தற்போது அந்த நிலை இல்லாத காரணத்தால் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜூன் மாதத்துக்குள் மின் வெட்டுப் பிரச்சனை ஓரளவுக்கு தீர்க்கப்படும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் வரும் டிசம்பருக்குள் மின்சார உற்பத்தி துவங்க உள்ளது. இதன் மூலம் 400 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் மின்பற்றாக்குறை சீராகும். செம்மொழி மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பஸ்கள், வேன், கார் நிறுத்துவதற்காக தாராள இடவசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave a Reply