யோகாசனத்துக்கு காப்புரிமை: மத்திய அரசு நடவடிக்கை

posted in: மற்றவை | 0

large_19947புதுடில்லி : யோகாசனத்துக்கு காப்புரிமை பெற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. காப்புரிமை பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மைய(சி.எஸ்.ஐ.ஆர்.,) நிபுணர்கள் வகுத்து வருகின்றனர்.

நமது நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான யோகா கலை தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் யோகா கலைக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதற்காக அங்கு யோகாசன பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. யோகா கலையில் 900 வகையான ஆசனங்கள் உள்ளன. அவற்றிற்கு காப்புரிமை பெற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த உடற்பயிற்சி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மின்னணு பாரம்பரிய அறிவுசார் நூலக இயக்குனர் குப்தா கூறியதாவது: யோகாசன கலையை அன்னிய நிறுவனங்கள் உரிமை கொண்டாடுவதையும், காப்புரிமை பெறுவதையும் தடுக்க 900 ஆசனங்களுக்கு காப்புரிமை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சித்த மருந்துகள் இயற்கை சிகிச்சை முறைகளுக்கும் காப்புரிமை பெற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. யோகாசனங்களை வீடியோ பதிவு செய்து பாரம்பரிய அறிவுசார் நூலகத்தில் (டி.கே.டி.எல்.,) பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகளை சி.எஸ்.ஐ.ஆர்., 2006ம் ஆண்டு துவங்கியது. யோகா கலைக்கான மூலங்கள் மற்றும் ஆதாரங்கள் பகவத் கீதை, பதஞ்சலி போன்ற பழமையான நூல்களிலிருந்து எடுக்கப்பட்டு வருகிறது. பல நாடுகள், 250 ஆசனங்களுக்கு ஏற்கனவே உரிமை கோரி உள்ளன.

சில அன்னிய நிறுவனங்கள் பல யோகாசனங்களுக்கு காப்புரிமை பெற்று விற்பனை செய்து வருகின்றன. நமது பாரம்பரிய உடைமையாக கருதப்படும் யோகா சனங்களை அன்னிய நிறுவனங்கள் உரிமை கோருவதையும், வணிக ரீதியில் பயன்படுத்துவதையும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, யோகாசனங்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்பட்டுள்ள காப்புரிமையை ரத்து செய்ய சி.எஸ்.ஐ.ஆர்., முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள காப்புரிமைக் கழகம் 3,000 யோகாசனங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு குப்தா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *