புதுடில்லி: ரயில் பயணம் பாதுகாப்பு இல்லாததா என்ற நிலைமைக்கு பொதுமக்கள் வரவேண்டிய தருணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே இந்திய ரயில்வே துறை பெரும் நெருக்கடியயில் சிக்கி வருவது மம்தாவின் ஆட்சித்திறம் குறைவாகவே பார்க்கப்படுகிறது என்று சொன்னால் அதிக விமர்சனமாக இருக்க முடியாது. ரயில்வே துறையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்திய உள்துறையை குறை கூறுவதும், , இல்லை இது ரயில்வேயின் பொறுப்பு என்று ஆளுக்கு ஆள் தட்டிக்கழிப்பதுவுமாகவே இருக்கிறது.
நக்சல்கள் வழியில் நாசம் : அச்சுறுத்தல்இந்த விஷயத்தில் முதலில் எடுத்துக்கொண்டால் நக்சல்கள் அச்சுறுத்தல்கள் தான். நக்சல் ஆதிக்கம் கொண்ட மாநிலங்களில் பெரும் சேதத்தையும் நஷ்டத்தையும் ரயில்வே சந்தித்திருக்கிறது. பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பார்லி.,யில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். ரயில்வே தண்டவாளம் தகர்ப்பு, ஸடேஷனுக்கு தீ வைப்பு, ரயில் கவிழ்ப்பு , எரிபொருள் ஏற்றி செல்லும் ரயில்களுக்கு தீ வைப்பு இப்படி பல வழிகளில் தங்களது ஆவேசத்தை போக்கி கொள்கின்றனர். ஆனால் இந்த குற்றச்செயல்கள் தொடர்பாக இது வரை முக்கியப்புள்ளிகள் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டதா என்றால்.., ம்ம்ம் .., ஏன் கைது கூட செய்யப்படவில்லை. குற்றப் பட்டியல் தொடருமே ஒழிய குற்றவாளிகள் நீதி முன் நிறுத்தப்படாததது ஏன்? இதில் யாரை குறை கூறுவது ?
பொறுப்பேற்க முடியாது ? : கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்குவங்கத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற ரயில் பாதை தகர்க்கப்பட்டதால் 160 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சந்தேகத்திற்கிடமானவர்கள் தான் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவிக்கிறது. டீசல் டாங்கர் ரயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்ட வழக்கில் கைது உண்டா என்றால் கைவிரிக்க மட்டுமே முடிகிறது. நக்சல் தாக்குதல் தொடர்பாக பிரச்னைகள் எழும் போது ரயில்வே துறை அமைச்சர் மம்தா இதற்கு ரயில்வே பொறுப்பேற்க முடியாது , மத்திய உள்துறையே பொறுப்பு என்றார்.
இதற்கிடையில் உள்துறை அமைச்சகம் அவ்வப்போது ரயில்வே துறைக்கு அலர்ட் மெசேஜ் அனுப்புகிறது. இதில் நக்சல்கள் நடமாடும் பகுதிகளில் ரயில்வே சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ளவும் என்கிறது அந்த மெசேஜ்.
அசட்டுத்தன்மை நீங்குமா ? : இந்த பிரச்னைகள் ஒரு புறம் இருக்க, ஏன் என்ற காரணம் தெரியாமலே பயணிகள் கொல்லப்படுவது, நேற்று நடந்த ரயில்வே விபத்தில் , நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதியது என்ற செய்தி , ஏன் இவ்வளவு அசட்டுத்தன்மை ? ரயில் நிற்கிறது என்றால் அங்கேயே டிராக்கை மாற்றியிருக்க வேண்டும். அல்லது நிறுத்தியிருக்க வேண்டும், ஏன் சிக்னல் கொடுப்பவர்கள் அதிகாலை என்பதால் தூங்கி விட்டார்களா? இதற்கு காரணமான ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? , கருணைத்தொகை கொடுத்து விடுவதால் இழந்த சொந்தத்தை பெற முடியுமா ? இது தொடர்பான விஷயத்தில் சட்டங்கள் திருத்தப்பட்டு தண்டனைகள் கடுமையாக வழங்கப்படுமா என பொதுஜனம் எதிர்பார்க்கிறது.
இந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார் மம்தா ( ரயில்வே துறைக்கு அமைச்சர் ! ) . ஆனால் பொறுப்பேற்க தயாராக இல்லை. பதவி முக்கியமாக பார்க்கப்படுகிறது. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்து கொண்டே காங்கிரஸ் அரசை சாடுகிறார். இதையும் காங்., பார்த்து சகித்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இது கவனக்குறைவு தான் காரணம் என முதல் கட்ட விசாரணை தெரிவிக்கிறது.கடந்த 4 மாதத்தில் 11 விபத்துக்கள்.
மேலும் ரயில்வே தேர்வு வாரியத்தில் வினாத்தாள் விற்கப்பட்டு லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டுள்ள சம்பவம்.தேர்வு எழுதியவர்கள் அதோகதி, மேலும் நடக்க வேண்டிய சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வு வாரிய அதிகாரிகள் பங்கு போட்டு பணத்தை பிரித்துள்ளனர். இதற்கு இது வரை மம்தா பதில் சொல்லவில்லை.
இதற்கிடையில் பீகாரில் ( இன்று செவ்வாய்கிழமை ) அமர்பாலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளை தாக்கி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் பல பயணிகள் தங்களுடைய உடமைகளை இழந்ததுடன் உடல் காயங்களையும் பெற்றுள்ளனர். கடந்த ஆறு மாதத்தில் கொள்ளை சம்பவம் பீகாரில் மட்டும் 12 முறை நடந்திருக்கிறது.
இது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு ரயில்வே துறை அமைச்சர் மம்தா என்ன பதில் சொல்ல முடியும். யார் மீதாவது பழி போடுவதை நிறுத்திக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காண்பிக்கட்டும். இன்னும் பொறுப்பற்ற செயல்கள் தொடர்ந்தால் நாம் இழக்க வேண்டிய உயிர்ப்பலி அதிகரிக்கும் என்பதில் மாற்றம் இல்லை.
Leave a Reply