டேராடூன் : “பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவை தூக்கில் போடாமல் தாமதம் செய்கிறீர்களே, அவர் என்ன உங்கள் மருமகனா’ என காங்கிரஸ் கட்சிக்கு, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தான் பேசியதற்கு மன்னிப்பு தெரிவிக்கவும் மறுத்தார் கட்காரி.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில், கட்சித் தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது: பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளி அப்சல் குருவுக்கு, கோர்ட் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், அப்சல் குருவுக்கான தண்டனையை நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு தாமதப்படுத்துகிறது. நான்கு ஆண்டுகளாக இது தொடர்பான ஆவணங்களை வைத்துக் கொண்டு, ஷீலா தீட்சித் தலைமையிலான டில்லி மாநில அரசு தாமதம் செய்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படியே, தான் செயல்பட்டதாக ஷீலா தீட்சித் பதில் அளித்துள்ளார்; இது வேடிக்கையாக உள்ளது. பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கான தண்டனையை நிறைவேற்றாமல், காங்கிரஸ் அரசு ஏன் தாமதம் செய்கிறது என தெரியவில்லை. அப்சல் குரு என்ன உங்கள் மருமகனா என, காங்கிரசை கேட்க விரும்புகிறேன். இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.
காங்கிரஸ் கண்டனம்: நிதின் கட்காரியின் இந்த ஆவேச பேச்சு, காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறுகையில், “நிதின் கட்காரி முற்றிலும் நிதானம் இழந்து பேசுகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. அவரை உடனடியாக, மன நல மருத்துவமனையில் அனுமதிப்பது நல்லது; அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.
வருத்தம் தெரிவிக்க மறுப்பு: இதுகுறித்து நிதின் கட்காரி கூறுகையில், “நான் பேசியதில் எந்த தவறும் இல்லை; இதற்காக யாரிடமும் நான் மன்னிப்பு கேட்கப்போவதும் இல்லை. நான் ஏற்கனவே தெரிவித்த கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை’ என்றார். ஏற்கனவே அரசு குறித்து கடும் விமர்சனங்களை செய்த கட்காரி, இத்தடவை புதிதாக அப்சல் குரு விஷயத்தில் சர்ச்சையை கிளப்பி பேசியிருக்கிறார்.
Leave a Reply