வாஷிங்டன்:”அமெரிக்க பொருளாதாரம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது’ என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் உலகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியா பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் கன்சாஸ் நகரத்தில் நடந்த பொருளாதார மீட்சி பற்றிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் ஒபாமா கூறியதாவது:அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டில் 6 சதவீதமாக சுருங்கிய அமெரிக்கப் பொருளாதாரம், இப்போது வளர்ச்சி அடைந்து வருகிறது.இவ்வளர்ச்சியால் நாம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட விளைவுகளை குறுகிய காலத்துக்குள் சரிசெய்து விடும் என்று நான் கூறவில்லை.
இன்றும், ஒரு வேலைக்கு ஐந்து வேலையில்லா நபர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இருப்பினும், ஆற்றல் துறையில் மட்டும் அடுத்த சில ஆண்டுகளில் ஏழு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். இது நம் பொருளாதாரத்தை குறுகிய காலத்துக்குள் வளர்க்கும் நடவடிக்கை அல்ல; ஆனால் எதிர்காலத்துக்கான அடித்தளம்.இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
இதற்கிடையில் ஒபாமா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “உலகளாவிய அளவில் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. குறிப்பாக ஆசியாவில் பொருளாதாரம் உறுதியான வகையில் வளர்ந்து வருகிறது.உலக பொருளாதார பாதிப்பில் இந்தியா பாதிக்கப்படவில்லை. காரணம், வெளியில் இருந்து வரும் பண அளவுத் தேவை அங்கே குறைவு. நிதித்துறை மற்றும் நிதி ஊக்குவிப்பு சலுகைகள் மூலம் அங்கே பாதிப்பு ஏற்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Leave a Reply