அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் இல்லை

posted in: கல்வி | 0

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுகலை பட்டப் படிப்பில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உயர்கல்வித்துறை முதன்மை செயலர் கணேசன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
நடப்பு 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில், வரும் கல்வியாண்டிலிருந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.ஏ., – எம்.எஸ்சி., போன்ற முதுகலை பட்டப் படிப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும் என, அரசு அறிவித்திருந்தது.

இதுதொடர்பான கருத்துருவை கல்லூரிக் கல்வி இயக்குனர், அரசின் பரிசீலனைக்கு அனுப்பியிருந்தார். அக்கருத்துரு ஆய்வு செய்யப்பட்டு, 2010-11ம் கல்வியாண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை ரத்து செய்யலாம் என முடிவு செய்து, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2009 – 10ம் ஆண்டு நிலவரப்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்பில் 4,423 இடங்கள் உள்ளன. இவற்றில் கடந்த ஆண்டு 4,367 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். முதுகலை படிப்பில் இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து, 8,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வர் என தெரிகிறது. அரசின் உத்தரவால், இம்மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *