சென்னை: ‘இக்னோ’விடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், மாணவர் சேர்க்கையை நடத்த முடியாமல் இருப்பதாக, சமுதாயக் கல்லூரிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகம் (இக்னோ), தன்னுடன் இணைப்பு பெற்று செயல்படும் சமுதாயக் கல்லூரிகள் திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. கல்வியறிவு இல்லாதவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இத்திட்டத்தை இக்னோ உருவாக்கியது.
இதன்படி, ஒவ்வொரு பகுதியிலும், அங்குள்ள தேவைகளுக்கு ஏற்ற பாடங்களை சொல்லித் தரும் சமுதாயக் கல்லூரிகள் துவக்கப்படும். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, இக்னோ மூலம், ‘அசோசியேட் டிகிரி’ வழங்கப்படும். ‘அசோசியேட் டிகிரி’ பெற்றவர்கள், இக்னோவில் சேர்ந்து பட்டம் படிக்க முடியும். இதனால், இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு எழுந்தது.
இக்னோவின் இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் 80க்கும் மேற்பட்ட சமுதாயக் கல்லூரிகள் உட்பட, நாடு முழுவதும் 440க்கும் மேற்பட்ட சமுதாயக் கல்லூரிகள் துவக்கப்பட்டன. சமுதாயக் கல்லூரியின் அகடமிக் கவுன்சிலில், இக்னோவின் பிரதிநிதி ஒருவர் இடம்பெறுவார் என இக்னோ தெரிவித்துள்ளது.
இதற்காக இக்னோவிற்கு சமுதாயக் கல்லூரிகள் கடிதம் எழுதினால், எவ்வித பதிலும் கிடைப்பதில்லை என சமுதாயக் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது, மாணவர் சேர்க்கையை நடத்தலாமா, கூடாதா என எந்த விஷயங்கள் குறித்தும் இக்னோவிற்கு சமுதாயக் கல்லூரிகள் எழுதும் கடிதங்களுக்கு முறையான பதில் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
இதனால், பாடம் நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திய நிலையில், மாணவர் சேர்க்கையை நடத்த முடியாமல் இருப்பதாக சமுதாயக் கல்லூரிகள் தெரிவித்தன.
Leave a Reply