மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் நிறவெறி கும்பல் நடத்திய தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து இந்தியர்கள் அவமானப்படுத்தப்படும் சம்பவம் நிகழ்கிறது.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது, நிறவெறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளது.இந்தியர் மீதான நிறவெறி தாக்குதல் சம்பவங்கள் குறித்து, அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக கூறிவருகிறது. இருப்பினும் நிறவெறி தாக்குதல் சம்பவங்கள் தொடர்கிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்தவர் ராஜன் குமார் கத்கம்;இந்தியர்.இவர் கல்வி பயில்வதற்காக கடந்த 2008ம்ஆண்டு ஆஸ்திரேலியா சென்றார்.அங்குள்ள கல்லூரி ஒன்றில் ராஜன்குமார் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயின்று வருகிறார்.இந்நிலையில், ராஜன்குமார் அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ்சில் குடிபோதையில் வந்த மூன்று இளைஞர்கள் ராஜன் குமாரிடம் தகராறு செய்தனர். அவரை நிறவெறியுடன் திட்டிவிட்டு அடித்தனர் .இதில் ராஜன்குமாரின் கழுத்து மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதுதவிர, ராஜன்குமார் மீது மாமிச துண்டுகளையும் வீசியுள்ளனர்.
இச்சம்பவத்தை பார்த்த வெள்ளைக்கார பெண் ஒருவர் ராஜன்குமாரிடம் தகராறு செய்தவர்களை தட்டி கேட்டுள்ளார்.அதன்பின் அந்த நிறவெறி கும்பல், அமைதியாக பஸ்சில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டது.இச்சம்பவம் குறித்து, ராஜன்குமார் மெல்போர்ன் போலீசில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜன்குமாரை தாக்கிய மர்ம இளைஞர்களை பிடிக்க, பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், பதிவான வீடியோ காட்சிகளை போலீசார் பெற்றுள்ளனர். எனவே, குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என அவர்கள்நம்பிக்கை தெரிவித்தனர். இதுகுறித்து விக்டோரியா மாகாண இந்தியர் நல சங்கத் தலைவர் வாசன் சீனிவாசன் கூறுகையில்,” தாக்குதலுக்கு உள்ளான ராஜன்குமார் உடலளவிலும்,மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் விரைவில் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும், அவரது உடல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, படிப்பை அடுத்த ஆண்டு தொடர கல்லூரியில் அனுமதி கோரியுள்ளோம்’ என்றார்.விக்டோரியா மாகாணத்தில் மட்டும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இதுவரை இந்திய மாணவர்கள் மீது, 100க்கும் மேற்பட்ட நிறவெறி தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply