புதுடில்லி :எம்.பி.,க்களின் சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்த மத்திய அரசு தயாராகி விட்டது. இதற்கான மசோதாவை வரும் 26ம் தேதி துவங்கவுள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மற்ற மசோதாக்களை விட, எம்.பி.,க்களின் சம்பள மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டையும் சேர்த்து, 795 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களின் மாதச்சம்பளம் தற்போது 16 ஆயிரம் ரூபாயாக உள்ளது. கடைசியாக, பத்தாண்டுகளுக்கு முன், எம்.பி.,க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதற்கு பின், சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2006 ஜனவரியில் இருந்து அமலுக்கு வந்தன. இதன் காரணமாக, மத்திய அரசின் அமைச்சரவை செயலர்களுக்கான சம்பளம் 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அமைச்சரவை செயலர்களை விட, எம்.பி.,க்களுக்கு கூடுதல் அந்தஸ்து உண்டு. காரணம் சட்டம் இயற்றும் பொறுப்பை உடையவர்கள் என்று கருதப்படுகிறது. இதனால், அமைச்சரவை செயலர்களை விட, தங்களின் சம்பளம் ஒரு ரூபாயாவது அதிகமாக இருக்க வேண்டும் என, எம்.பி.க்களின் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்.பி., சரண் தாஸ் மகந்த் தலைமையில் பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, எம்.பி.,க்களின் சம்பளம் தற்போதுள்ள 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக (ஐந்து மடங்கு) அதிகரிக்கப்பட வேண்டும் என, பரிந்துரை செய்தது. இந்த சம்பள உயர்வு, தற்போது அமைச்சரவை செயலர்கள் பெறும் சம்பளத்தை விட, ஒரு ரூபாய் கூடுதலாகும்.சம்பள உயர்வுடன், பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும்போது எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் தினப்படியையும் தற்போதுள்ள 1,000 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும், அதேபோல், எம்.பி.,க்களின் தொகுதி செலவு நிதி, அலுவலகச் செலவு நிதி ஆகியவற்றையும் அதிகரிக்க வேண்டும் என்றும், பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரை செய்தது.
இந்நிலையில், வரும் 26ம் தேதி பார்லி மழைக்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்த கூட்டத் தொடரிலேயே எம்.பி.,க்களின் சம்பள உயர்வு தொடர்பான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 110 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், எம்.பி.,க்கள் சம்பள உயர்வு மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த கூட்டத் தொடரில், அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதா, நீதித் துறை பணிகள் தொடர்பான மசோதா, மத வன்முறை மசோதா, கடத்தல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் பெண்கள் ஒதுக்கீட்டு மசோதா இந்த கூட்டத் தொடரில் கண்டு கொள்ளப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதவை, லோக்சபாவில் நிறைவேற்றுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, ஆகஸ்ட் 27ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பி.கே.பன்சால், நேற்று அமைச்சக செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
எதிர்க்கட்சிகள் நெருக்கடி:ஐக்கிய ஜனதா தள தலைவரும், தே.ஜ., கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான சரத் யாதவ் கூறியதாவது:பார்லிமென்டில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க, எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக, விலைவாசி உயர்வு பிரச்னைகளில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த “பந்த்’திற்கு மக்களிடையே ஆதரவு இருந்ததை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. இது தொடர்பாக, தே.ஜ., கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது.இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.
Leave a Reply