ராமநாதபுரம் : பிலிப்பைன்ஸ் நாட்டின் பாசிகள் கடல் வழியாக, மன்னார் வளைகுடாவில் ஊடுருவியது தெரிய வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மன்னார் வளைகுடாவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம், குருசடை தீவில் நேற்று நடந்தது. கலெக்டர் ஹரிஹரன், மன்னார் வன உயிரின காப்பாளர் சுந்தரக்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவு முழுவதையும் சுற்றிப் பார்த்தனர். ஆய்வுக்காக தீவையொட்டிய பகுதியில் பவளப் பாறைகள் சேகரிக்கப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டது. இதில், பிலிப்பைன்ஸ் நாட்டின் “கப்பாபைகஸ் ஆல்வரேசி’ என்ற கடல்பாசி பவளப் பாறைகளை மூடியிருப்பது தெரிய வந்தது. “ரப்பர்’ போன்ற தன்மை கொண்ட இப்பாசிகள் பவளங்களில் படிந்து அவற்றின் சுவாசத்தை தடுத்து நிறுத்துகின்றன. இதனால் பவளப் பாறைகள் அழிவை சந்திக்கிறது.
கடந்த 1995ல், பிலிப்பைன்சியை சேர்ந்த குளிர்பான நிறுவனம் ஒன்று இந்த பாசியை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது. இதை பவளப்பாறைகள் இல்லாத பாக்ஜல சந்தி கடற்பகுதியில் மீனவர்களை வளர்க்க செய்துள்ளது. இதன் மூலம் சில நிறுவனங்களும், இடைத்தரகர்களும் பயன் பெற்று வருகின்றனர். பவளப் பாறைகள் அதிகம் கொண்ட மன்னார் வளைகுடாவில் இவற்றை வளர்க்க சாத்தியம் இல்லை என்ற நிலையிலும், பாக்ஜல சந்தியிலிருந்து கடல் வழியாக ஊடுருவிய “கப்பாபைகஸ் ஆல்வரேசி’ பாசிகள் மன்னார் வளைகுடாவிலும் பரவி உள்ளது. தற்போது மன்னார் வளைகுடாவின் சிங்கிள், குருசடை, பூமரிச்சான் தீவுகளில் முற்றிலும் ஆக்கிரமித்துள்ள இப்பாசிகள், எஞ்சியுள்ள 18 தீவுகளிலும் விட்டு வைக்காது என்ற கவலை தற்போது எழுந்துள்ளது. இப்பாசியால், பவளப் பாறைகள் பாதிக்கப்படுவதால், புவி வெப்பமடைவது தவிர்க்க முடியாததாகி விடும். அதே நேரத்தில் பேரலை, கடல் அதிர்வுகளை சமாளிக்கும் தன்மையை பவளப் பாறைகள் இழக்கும். இதனால் பாதிப்பு தமிழகத்திற்கு தான்.
Leave a Reply