சென்னை: வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்ததி்ல் வரி ஏய்ப்பு செய்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ தொடர்ந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம்இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய இந்தியன் வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் சுஜாரிதா, நடரஜானின் உறவினர் பாஸ்கரன் மற்றும் லண்டனில் வசிக்கும் யோகேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1994ம் ஆண்டில் லண்டனில் இருந்து புத்தம் புதிய லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்தார் நடராஜன். ஆனால், புதிய காருக்கு சுங்க வரி அதிகம் என்பதால், அதை பழைய கார் போல காட்டி இறக்குமதி செய்தார் நடராஜன். இதனால் ரூ. 1.6 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தார்.
கார் தொடர்பாக ஆவணங்கள் சுங்கத்துறையினர் ஆய்வு செய்தபோது அது புத்தம் புதிய கார் என்று தெரியவந்தது. வரி ஏய்ப்பு செய்வதற்காக அதை பழைய கார் போல காட்ட போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்திருப்பதும் உறுதியானது.
இது குறித்து சுங்கத்துறை வழக்கு த் தொடர்ந்தது. பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
நடராஜன், அவரது மருமகன் பாஸ்கரன், வங்கி மேலாளர் சுஜாரிதா, லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஸ்வரன் ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது.
இதில் பாலகிருஷ்ணனும், யோகேஸ்வரனும்ம் வழக்கு பதிவுச் செய்யப்பட்ட 1997ம் ஆண்டு முதலே தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதி தனது தீர்ப்பில் நடராஜன், பாஸ்கரன், மோசடிக்கு உதவிய சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் சுஜாரிதா, லண்டனைச் சேர்ந்த யோகேஷ்வரன் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Leave a Reply