கோல்கட்டா : கால்பந்து போட்டிகளை நடத்தி, அதில் சிறப்பாக விளையாடும் இளைஞர்களை மட்டுமே நக்சலைட்கள் தங்கள் அமைப்புக்கு தேர்வு செய்கின்றனர் என, தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கம், மிட்னாபூர் மாவட்டத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பழங்குடியினர் வசிக்கும் அடர்ந்த வனப் பகுதி. இந்த சூழ்நிலை நக்சலைட் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக நக்சலைட் அமைப்புக்கு, பாதுகாப்பு படையினரால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட நக்சலைட்கள், பாதுகாப்பு படையினரால் இங்கு சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தோல்வியையும், உயிரிழப்பையும் தடுக்கும் வகையில், தங்கள் அமைப்புக்கு தகுதிவாய்ந்த இளைஞர்களை தேர்வு செய்யும் முயற்சியில் நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர்கள் களம் இறங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, இங்குள்ள சல்போனி பகுதியில் கல்சிபங்கா, மதுராபூர், பித்ராகுலி, கத்ரா போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நக்சலைட் அமைப்பு சார்பில், கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. போலீசாருக்கு எதிரான மக்கள் நடவடிக்கை குழு தான், இந்த போட்டிகளை ஏற்பாடு செய்கிறது. இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இளைஞர்களை மட்டுமே, நக்சலைட்கள் தங்கள் அமைப்பில் சேர்த்துக் கொள்கின்றனர். குறிப்பாக, போட்டி நேரம் முழுவதும் களைப்படையாமல் விளையாடுவோர், வேகமாக ஓடுபவர் ஆகியோரை கண்காணித்து, அவர்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். போலீசாருக்கு எதிரான மோதலின்போது, இதுபோன்ற திறமைகள் அவசியம் என்பதால், இந்த அடிப்படையில் தங்கள் அமைப்புக்கு ஆட்களை நக்சலைட்கள் தேர்வு செய்கின்றனர். அதே நேரத்தில் பெண்களாக இருந்தால், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் போன்ற போட்டிகளை நடத்தி, அதில் சிறப்பாக செயல்படும் பெண்களை தேர்வு செய்கின்றனர் என, உளவுத் துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
Leave a Reply