கிளிண்டன் மகள் திருமணத்திற்கு ஒபாமாவை அழைக்கவில்லையாம்!

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்சியா கிளிண்டன் திருமணம்தான் அமெரிக்காவின் தற்போதைய பரபரப்பாக உள்ளது.

ஆனால் இந்தக் கல்யாணத்திற்கு அதிபர் ஒபாமாவை கிளிண்டன் தம்பதியினர் அழைக்கவில்லையாம்.

முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் மற்றும் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தம்பதியின் மகள் செல்சியாவுக்கும், மார்க் மெஸ்வின்ஸ்கிக்கும் வருகிற சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது. இத் திருமணத்திற்கு ஒபாமாவிற்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை.

இது குறித்து ஒபாமா கூறுகையில்,

என்னை இந்த திருமணத்திற்கு ஹில்லாரியும், பில்லும் அழைக்கவில்லை. அவர்கள் இந்த நிகழ்வை செல்சியாவுக்கும் அவரது வருங்கால கணவருக்கும் மட்டும் உரியதாக்குகின்றனர் என்று நான் நினைக்கிறேன்.

ஒரே திருமணத்தில் 2 அதிபர்கள் இருந்தால் ரகசிய போலீஸ், மெடல் டிடக்டர்கள் என்று வரும் விருந்தினருக்கு தொல்லை என்றார்.

இதேபோல கிளிண்டனிடம் துணை அதிபராக இருந்த அல் கோர், பிரபலங்கள் பார்பரா ஸ்ட்ரூசன்ட், டெட் டர்னர் ஆகியோரும் செல்சியா கல்யாணத்திற்கு அழைக்கப்படவில்லை.

இந்த திருமணம் மான்ஹாட்டனில் இருந்து வடக்கே 90 மைல் தூரத்தில் உள்ள குட்டி நகரில் உள்ள ஒரு ஆடம்பர எஸ்டேடில் நடக்கிறது. இதற்காகும் செலவு சுமார் 3 முதல் 5 மில்லியன் டாலர் ஆகும். வரும் சனிக்கிழமை நடக்கும் இந்த திருமணத்தின் பாதுகாப்பு செலவு மட்டும் 200,000 டாலர்கள்.

ஏராளமான கடைகளில் மணமக்களை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். பாட்ரிசியா நிக்சன் திருமணத்திற்கு பின் இவ்வளவு கவனத்தை ஈர்த்துள்ளது இந்த திருமணம் தான் என்று டான்னி பிரவுன் என்னும் திருமண ஏற்பாடுகள் செய்பவர் கூறினார். இந்த ஆண்டின் மிகப் பெரிய திருமணம் இது தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *