காத்மாண்டு : நீச்சல் உடையில் அலையும் நபர்களை கொன்ற சார்லஸ் சோப்ராஜுக்கு, நேபாள சுப்ரீம் கோர்ட் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய தந்தைக்கும், வியட்நாம் தாய்க்கும் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ்(66). பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், கடற்கரையில் நீச்சல் உடையான “பிக்னி’ உடையில் அலையும் நபர்களை கருணை இல்லாமல் கொலை செய்து வந்தார்.நேபாளத்தில் கடந்த 75ம் ஆண்டு, கோனி ஜோ புரோன்சிச் என்ற அமெரிக்கரை கொன்று எரித்ததற்காக, 2003ம் ஆண்டு காத்மாண்டுவில் இவர் கைது செய்யப்பட்டார். நேபாள கீழ் கோர்ட் இவருக்கு ஆயுள் தண்டனையை அறிவித்தது. இதை எதிர்த்து, இவர் அந்நாட்டு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராம்குமார் பிரசாத் ஷா, கவுரி தகால் ஆகியோர், கீழ் கோர்ட்டுகள் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.இதன் மூலம் சோப்ராஜுக்கு, 20 ஆண்டு கால சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இவர் ஏழாண்டுகள் சிறையில் கழித்து விட்டார். போலி பாஸ்போர்ட் மூலம் இவர் நேபாளம் வந்ததற்காக, மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் அளிக்கப்பட்டுள்ளது.பல்வேறு கொலைகள் செய்த குற்றத்துக்காக, இவர் ஏற்கனவே இந்திய சிறையில் 21 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடா நாட்டை சேர்ந்த லாரன்ட் ஆர்மான்ட் என்பவரை பக்தாபூர் என்ற இடத்தில், கொலை செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
நேபாள சிறையில் இருந்த போது நிகிதா பிஸ்வாஸ் என்ற “டீன்ஏஜ்’ பெண்ணை சோப்ராஜ் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிகிதாவின் தாயார் சகுந்தலா தாபா, தற்போது சோப்ராஜுக்காக வாதாடி வந்தார். “சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது அநீதியானது’என, இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply