நாமக்கல்:””சுங்கச்சாவடி மையத்தில் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் நிலை மாறி, செல்லும்போது எல்லாம் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.
இப்பிரச்னை குறித்து முதல்வரிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என, கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு பேசினார்.அசோக் லேலண்டு நிறுவனம் சார்பில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த லாரி டிரைவர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நாமக்கல்லில் நடந்தது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:டிரைவர்கள் நலனில் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி ஊதியம், போனஸ், பென்ஷன் போன்றவை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி 12 சதவீதமாக இருந்த போனஸ் 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பண்டிகை முன்பணம், படிப்பு உதவித்தொகை உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. போக்குவரத்து துறை சார்பில் மருத்துவம், இன்ஜினியரிங், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., போன்ற அனைத்துக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் சிறப்பான பணியை செய்கின்றன.
இந்தியாவில் மொத்தம் உள்ள சாலைகளில், 70 சதவீதம் நான்குவழிச்சாலை தமிழகத்தில் உள்ளது. அதனால்தான் சுங்கச்சாவடி பிரச்னை வந்துள்ளது. இதை மாற்றியமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்துத்துறை சட்டம் அனைத்தும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.சுங்கச்சாவடி மையத்தில் 24 மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் நிலை மாறி, செல்லும்போது எல்லாம் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. அதன்படி ஒரு அரசு பஸ் நாளொன்றுக்கு 910 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதேநிலை நீடித்தால் இரண்டு, மூன்று ஆண்டுகளில் அந்த பஸ்ஸை சுங்கம் வசூலிப்பவர்களிடமே கொடுத்துவிட வேண்டிய நிலை ஏற்படும். இந்தப் பிரச்னை குறித்து முதல்வரிடம் தெரிவித்து கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் நேரு, அசோக் லேலண்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் சேஷசாயி ஆகியோர் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த லாரி டிரைவர்களின் வாரிசுகளுக்கு லேப்-டாப் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கினர். அதுபோல் அதிக மதிப்பெண் பெற்ற லாரி டிரைவர்களின் வாரிசுகள் 150 பேருக்கு கல்வி உதவித்தொகையும் அவர்களின் பெற்றோருக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு பாலிசியும் வழங்கப்பட்டது.
சட்டசபை துணை சபாநாயகர் துரைசாமி, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி, பனமரத்துப்பட்டி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் அசோக் லேலண்டு, டி.வி.எஸ்., நிறுவன உயரதிகாரிகள், லாரி உரிமையாளர்கள், மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.
Leave a Reply