பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும், டோல்கேட் வரியை குறைக்கக் கோரியும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் மேற்கொள்வது குறித்த முடிவு எடுக்க, அகில இந்திய மோட்டார் காங்கிரசின் நிர்வாகக்குழு கூட்டம், வரும் 12ல் டில்லியில் கூடுகிறது.
கடந்த ஜூன் 25ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இது லாரி உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து, கடந்த 5ம் தேதி நடந்த பொது வேலை நிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு, லாரிகளை இயக்க வில்லை. “பெட்ரோல், டீசல் விலையை எக்காரணம் கொண்டும் குறைக்க மாட்டோம்’ என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து, ஸ்டிரைக் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ள வரும்12ம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்கமான அகில இந்திய மோட்டார் காங்கிரசின் நிர்வாகக் குழு கூட்டம், தலைவர் சண்முகப்பா தலைமையில் டில்லியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில, மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து, வரும் 21ல் தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவரசக் கூட்டம் தலைவர் நல்லதம்பி தலைமையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நடக்கிறது. டீசல் விலை உயர்வு, டோல்கேட் வரி உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பதால், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் மேற்கொள்வது குறித்த முக்கிய முடிவும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ள லாரி தொழிலில், டீசல் விலை உயர்வால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகள் குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாடு தழுவிய ஸ்டிரைக் மேற்கொள்வது குறித்தும், அதற்கான தேதியும் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply