ஸ்ரீகாகுளம் : ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ஜெகன் மோகன், கட்சி மேலிடத்தின் உத்தரவை மீறி, ஆறுதல் யாத்திரையை நேற்று துவக்கினார்.
தன்னுடைய அரசியல் செல்வாக்கை காட்டும் நோக்கில் ஜெகன் மோகன், நடத்தும் இந்த யாத்திரையை காங்கிரஸ் மேலிடம் முழுவதும் ரசிக்கவில்லை. தனது தாய் மற்றும் மனைவியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து அனுமதி கோரினார். ஆனால், இதற்கு சோனியா அனுமதி மறுத்து விட்டார். கட்சித் தலைமையின் உத்தரவை மீறி “ஆறுதல் யாத்திரையை துவக்க முடிவு செய்தார். இதற்கு ராஜசேகரரெட்டியின் ஆதரவாளர்களும், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்களும் ஆதரவளித்துள்ளனர். “எனது தந்தை பலியான செய்தியால் உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு, மகன் என்ற முறையில் நான் நேரில் சென்று ஆறுதல் கூறி, நிதியுதவி செய்வது என்னுடைய தனிப்பட்ட கடமை. இதனால், கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காரணம் ஏதும் கூறாமல் சோனியா இந்த யாத்திரைக்கு தடைவிதித்துள்ளார்’ என, ஜெகன் மோகன் தெரிவித்திருந்தார். “ஜெகன் மோகன் நடத்தும் யாத்திரையில் கலந்து கொள்ளும் கட்சிப் பிரமுகர்கள் மீது விதிமுறை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும்’என, முதல்வர் ரோசய்யா எச்சரித்திருந்தார்.
இதையெல்லாம் மீறி ஜெகன் மோகன், தனது தந்தையின் பிறந்த நாளான நேற்று, ஸ்ரீகாகுளத்தில் உள்ள இச்சாபுரத்தில் தனது ஆதரவாளர்கள் புடைசூழ யாத்திரையை மீண்டும் துவக்கினார். இச்சாபுரத்தில் ராஜசேகரரெட்டியின் சிலையை திறந்து வைத்து தொண்டர்கள் மத்தியில் ஜெகன் மோகன் பேசுகையில், “என் தந்தை இறந்த பிறகு நான் தனிமையை உணரவில்லை. ஏனென்றால் ஆந்திரா முழுவதும் அவரது தொண்டர்களாகிய பெரிய குடும்பத்தை எனக்கு விட்டுச் சென்றுள்ளார். மகாத்மா காந்தி அவருடைய வாழ்க்கையையே நாட்டிற்கு பாடமாக அளித்து விட்டு சென்றார். அதே வழியில் வந்தவர் தான் எனது தந்தையும். அவரது வாழ்க்கையே ஆந்திராவுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. என்னுடைய தந்தையிடமிருந்து நான் ஏராளமான பாடங்களை கற்றுள்ளேன். அவருடன் ஒருமுறை பேசுபவர்கள் நிறைய விஷயங்களை கற்க முடியும். அவருக்காக அன்பையும், ஆதரவையும் காட்டிய உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்’ என்றார். லோடாபுட்டி என்ற கிராமத்தில் உயிர்நீத்த சந்திராம்மா, என்ற தொண்டரின் குடும்பத்தை சந்தித்து ஜெகன் மோகன் ஆறுதல் கூறினார். லோடாபுட்டியிலும் அவர், ராஜசேகர ரெட்டியின் மற்றொரு சிலையை திறந்து வைத்தார்.
Leave a Reply