புதுடில்லி : தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69 சதவீத ஒதுக்கீட்டை கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் அமல்படுத்த மேலும் ஓராண்டுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இது எல்லாருக்கும் ஆறுதல் தரும் தீர்ப்பாகும்.
இட ஒதுக்கீடு, 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் மண்டல் வழக்கில் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில், 50 சதவீதத்துக்கு அதிகமான இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் பிற்பட்டோர் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவ இந்த நடைமுறை உருவானது. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இடங்களை இட ஒதுக்கீடு செய்து, தமிழக அரசால் சட்டம் கொண்டு வரப்பட்டது. முன்பு 1981ல், இட ஒதுக்கீடு 68 சதவீதம் என்றும், பின்பு, 1990ல் 69 சதவீத ஒதுக்கீடு தமிழகத்தில் இருந்தது என்றும் தமிழகம் வலியுறுத்தியது. ஆகவே மண்டல் கமிஷன் அடிப்படையில் தமிழகத்திற்கு இட ஒதுக்கீடு பொருந்தாது என்பதும் அரசின் அடிப்படை வாதமாகும். இச்சட்டத் திருத்தத்திற்கு அங்கீகாரம் தரும் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பை எதிர்த்து தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் முன்பு 1993ல் வழக்கு தொடரப்பட்டது.
அரசியல் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணையில் சேர்கப்பட்டுள்ள சட்டங்களை எதிர்த்து வழக்கு தொடரக்கூடாதா என கேட்டு சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 1997ல் ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அதன் படி அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சட்டங்களை, அடிப்படை உரிமைக்கருத்துக்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டிற்கு அனுமதி உண்டு என்றும், அதில் சேர்க்கப்பட்டுள்ள சட்டங்களை ஒவ்வொன்றாக விசாரிக்கப் போவதாகவும் தீர்ப்பளித்திருந்தது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து விஜயன் என்ற வக்கீல் “வாய்ஸ்’ என்ற அமைப்பின் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் முன்பு வழக்கு தொடர்ந்தார். ஆண்டு தோறும் இந்த விவகாரத்தில் நடைமுறை ஏதும் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 69 சதவீத ஒதுக்கீட்டிற்கு பெஞ்ச் அனுமதி தரும். அதே போல கல்வி வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஆண்டும் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது.
நேற்று இவ்வழக்கில் மத்திய அரசு தலைமை வக்கீல் கோபால் சுப்ரமணியம் மற்றும் தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், “இந்த விஷயத்தில் 50 சதவீத உச்சவரம்பு என்று இருந்தாலும், மண்டல் வழக்கு தீர்ப்பில் சில விலக்குகளும் உள்ளன’ என்பதைச் சுட்டிக்காட்டினர். தலைமை நீதிபதி எஸ்.எச்.காபாடியா, மற்றும் நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், சுதந்திரகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. முடிவில், தமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு தொடரலாம் என அனுமதியளித்த நீதிபதிகள், 69 சதவீத இடஒதுக்கீட்டு பிரச்னையை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம் எனவும் தெரிவித்தனர். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் 50 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளனர், என்ற விவரத்தை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஆதாரத்துடன் அளிக்க வேண்டும், எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் இதை ஆய்வு செய்த பின் தமிழக அரசு தேவைப்பட்டால், இது தொடர்பாக புதிய சட்டத்தை இயற்றலாம், எனவும் பெஞ்ச் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் 73 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. கர்நாடகாவும் இட ஒதுக்கீட்டு பிரச்னையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Leave a Reply