தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தப் பாராட்டுகளால் மேலும் ஊக்கம் பெற்று பணியாற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அமெரிக்காவில் உள்ள “தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ என்ற ஆங்கில இதழில் தமிழக அரசைப் பாராட்டி கட்டுரை வெளிவந்துள்ளது. அதில், சென்னை, டெட்ராய்டைப் போல உள்ளது என்றும், பல சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்களும், விநியோக நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன என்றும் கூறியுள்ளது.
மேலும், 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பெருநகரம் செழித்து வருவதாகவும், ஃபோர்டு, ஹுண்டாய், நிசான், ரெனால்ட், டெய்ம்லர் கிறைஸ்லர், பிஎம்டபிள்யூ ஆகிய முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னையில் சங்கமித்துள்ளன. கார் உதிரி பாகங்களின் விநியோக நிறுவனங்களும் சென்னையில் முதலீடு செய்து வருகின்றன என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அந்தக் கட்டுரையில் தமிழகத்தைப் பற்றியும், இங்கே தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் பற்றியும், தொழில் வளர்ச்சியில் திமுக அரசுக்குள்ள அக்கறை குறித்தும் எழுதப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே இதழைப் பற்றிய செய்தி தமிழகத்தில் பெரிதும் பேசப்பட்டது. அப்போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியைப் பற்றி நாள்தோறும் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழுக்கு மட்டும் நான்கு பக்க அளவுக்கு மிகப் பெரிய விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அதில், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பேட்டியும் இடம் பெற்றிருந்தது. ஜெயலலிதா அரசைப் பற்றி அமெரிக்காவில் உள்ள பத்திரிகைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
எந்த மாநில அரசாவது இப்படிச் செய்தது உண்டா? இலவசமாக செய்யப்பட்ட விளம்பரமா? இதற்காக நம்முடைய வரிப்பணம், விளம்பரக் கட்டணமாகத் தரப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தை வெளியிடுவதில் கமிஷன் பெற்றவர்கள் யார்? பங்கிட்டுக் கொண்டவர்கள் யார் யார்? என்றெல்லாம் அப்போது கேள்விகளைக் கேட்டேன். அதற்கு ஆட்சியினர் எந்தப் பதிலும் தரவில்லை.
பாராட்டுகளால் ஊக்கம் பெறுவோம்: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாக இந்திய தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய தொழில் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், கண்டனங்கள் என்று நடத்திய போதிலும், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தப் பாராட்டுகளால் மேலும் ஊக்கம் பெற்று பணியாற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
Leave a Reply