சென்னை: தமிழ் வழியில் பொறியியல் படிக்க ஜூலை 5ம் தேதி வரை ஒன்பது பேர் சேர்ந்துள்ளனர்.
பி.இ., – பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 112 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் உள்ள 447 பொறியியல் கல்லூரிகளில், மாநில அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 380 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
ஜூலை 5ம் தேதி துவங்கிய பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலையில் 7,125 இடங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 4,307 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 97 ஆயிரத்து 509 இடங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 8,941 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
ஆண்கள் அதிகம்: இப்பிரிவில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 537 பேர் விண்ணப்பித்தனர். இதில் 4,237 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 300 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதில், 92 ஆயிரத்து 663 பேர் ஆண்கள்; 64 ஆயிரத்து 637 பேர் பெண்கள்.
பொதுப்பிரிவில் எப்.சி., 12 ஆயிரத்து 876 பேர், பி.சி., முஸ்லிம் 7,505 பேர், பி.சி., 76 ஆயிரத்து 893 பேர், எம்.பி.சி., 38 ஆயிரத்து 142 பேர், எஸ்.சி., அருந்ததியினர் 2,086 பேர், எஸ்.சி., 19 ஆயிரத்து 288 பேர், எஸ்.டி., 510 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொதுப்பிரிவில் ஓ.சி., 33 ஆயிரத்து 752 இடங்கள், பி.சி., முஸ்லிம் 3,812 இடங்கள், பி.சி., 28 ஆயிரத்து 860 இடங்கள், எம்.பி.சி., 21 ஆயிரத்து 795 இடங்கள், எஸ்.சி., அருந்ததியினர் 3,276 இடங்கள், எஸ்.சி., 16 ஆயிரத்து 357 இடங்கள், எஸ்.டி., 1,089 இடங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 8,941 இடங்கள் உள்ளன. பொதுப்பிரிவு தர வரிசைப் பட்டியலில், முதல் ‘ரேங்க்’ பெற்ற நந்தகுமார் உள்ளிட்ட மாணவர்களுக்கு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சேர்க்கை ஆணையை வழங்கினார்.
பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: அண்ணா பல்கலை, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள பொதுப்பிரிவு இடங்களுக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில், 199 ‘கட்-ஆப்’ வரை பெற்ற 578 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர்.
இதுவரை விளையாட்டு வீரர்கள் பிரிவில் 99 பேர், பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் 3,778 பேர், அகடமிக் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 327 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் 235 இடங்கள் காலியாக உள்ளன. இப்பிரிவில் எஸ்.சி., – எஸ்.சி.ஏ., – எஸ்.டி., மாணவர்களுக்கு, பெண்கள் கல்லூரியில் மட்டும் காலியிடங்கள் உள்ளன.
பொது கவுன்சிலிங்கிற்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆசிரியர், அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடு உள்ள கல்லூரிகள் மீது பல்கலைக் கழகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. முதற்கட்ட கவுன்சிலிங் 20ம் தேதி வரை நடக்கிறது. இதில், 169 ‘கட்-ஆப்’ மதிப்பெண் வரை பெற்ற 46 ஆயிரம் பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இம்மாதம் 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும். புதிய பொறியியல் கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற்று வந்தால் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். இந்த ஆண்டு முதல், சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ் பயிற்று மொழி பாடப்பிரிவுகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் இதுவரை சிவில் படிப்பில் நான்கு பேர், மெக்கானிக்கல் படிப்பில் ஐந்து பேர் என மொத்தம் ஒன்பது பேர் சேர்ந்துள்ளனர். தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட விவரங்களை விரைவில் இணைய தளத்தில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு பொன்முடி கூறினார். இன்று நடக்கும் கவுன்சிலிங்கிற்கு, 197 ‘கட்-ஆப்’ மதிப்பெண் வரை பெற்ற 2,178 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., படிப்பை கைவிட்ட மூவர் : நேற்றைய கவுன்சிலிங்கிற்கு 578 பேர் அழைக்கப்பட்டனர். இதில், 150 பேர் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளவில்லை. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில் ஐந்து பேர், ‘இடம் வேண்டாம்’ என தெரிவித்தனர். நேற்று 423 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இ.சி.இ., பிரிவு 192 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் 85 பேர், மெக்கானிக்கல் 79 பேர், இ.இ.இ., 35 பேர், ஏரோநாட்டிக்கல் 15 பேர், சிவில் 5 பேர், இதர பிரிவுகளை 12 பேர் தேர்வு செய்தனர். நேற்றைய கவுன்சிலிங்கில் ஐ.டி., பிரிவை ஒருவரும் தேர்வு செய்யவில்லை.
நேற்றைய கவுன்சிலிங்கில் இடங்களை தேர்வு செய்தவர்களில் 104 பேர், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள். இவர்களுக்கு கல்விக் கட்டணமான 20 ஆயிரம் ரூபாயை அரசே செலுத்தும். எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் கிடைத்த மூன்று மாணவர்கள், நேற்று அப்படிப்பை கைவிட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். அவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான சேர்க்கை ஆணையை அண்ணா பல்கலையில் திருப்பிக் கொடுத்து, பொறியியல் சேர்க்கை ஆணையை பெற்றுச் சென்றனர்.
‘தமிழில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை’ : பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு முதல், தமிழ் பயிற்று மொழியில் வகுப்புகள் துவக்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் மட்டும் இந்த ஆண்டு தமிழ் வழி பொறியியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரு பிரிவுகளிலும் தலா 900 இடங்கள் என தமிழ் வழி பொறியியல் படிப்பில் மொத்தம் 1,800 இடங்கள் உள்ளன.
தமிழ் வழி பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் செலுத்தத் துவங்கியுள்ளனர். இதுவரை மொத்தம் ஒன்பது பேர் தமிழ் வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பதால், மாணவர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் வழி பொறியியல் படிப்பில் சேர்ந்த வினோத்தின் தந்தை அன்பரசு (தஞ்சாவூர்) கூறும் போது, “தமிழில் படித்தால் எளிமையாக இருக்கும் என்பதால் சேர்ந்துள்ளான். மாற்றுத் திறனாளி பிரிவில் கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளான்,” என்றார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த பாஸ்கர்ரூபனின் தாய் பிலோரா ஏஞ்சல்மேரி கூறும் போது, “முதல் முறையாக தமிழில் பொறியியல் படிப்பை கொண்டு வந்துள்ளனர். தமிழில் படித்தால் தமிழகத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்படிப்பில் சேர்ந்துள்ளான். பண்ருட்டி அண்ணா பல்கலை கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளான்,” என்றார்.
கோவையைச் சேர்ந்த தாமோதரன் கூறும்போது, “தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். தாய் மொழியில் படிப்பதை பெருமையாகக் கருதுகிறேன். பிளஸ் 2வில் தமிழ் பயிற்றுமொழியில் படித்தேன். அரியலூர் அண்ணா பல்கலையில் சிவில் பிரிவை தேர்வு செய்துள்ளேன்,” என்றார்.
Leave a Reply