தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

posted in: மற்றவை | 0

சென்னை: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

தர்மபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கல்லூரியின் வசதிகளை இந்திய மருத்துவக் கவுன்சில் குழு ஆய்வு செய்தே மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்து வருகிறது.

இந்த ஆண்டும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் புதிய குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் கல்லூரியை ஆய்வு செய்தனர். இதையடுத்து மாணவர்களைச் சேர்க்க நேற்று அனுமதி அளித்தனர்.

இந்தக் கல்லூரியின் மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இதில் தமிழக மாணவர்களுக்கு 85 இடங்கள் ஒதுக்கப்படும்.

அதே போல விழுப்புரம், திருவாரூர் ஆகிய புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கவும் இந்திய மருத்துவக் கவுன்சில் நேற்று முன் தினம் அனுமதி அளித்தது.

இதன்மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு 255 இடங்கள் கிடைத்துள்ளன.

இந்த இடங்கள் சென்னை [^]யில் ஜூலை 21ம் தேதி நடைபெறும் எம்பிபிஎஸ் 2ம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும்.

விழுப்புரம், திருவாரூர் அரசு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்த்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளன.

இதில் மொத்தம் 2,237 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 292 இடங்கள் போக தமிழக ஒதுக்கீட்டுக்கு 1,945 இடங்கள் உள்ளன.

முதல் கட்ட கவுன்சிலிங்கின்போது 14 அரசு மருத்துவக் கல்லூரிகளின் இருந்த 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே சென்னை வண்டலூர் அருகே கட்டப்பட்டுள்ள தாகூர் தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இங்கு மொத்தம் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இங்கு தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கு 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *