திமுக மட்டும் விற்பனை வரியைக் குறைக்காதது ஏன்?- விஜயகாந்த் கேள்வி

posted in: மற்றவை | 0

சென்னை: இந்தியாவிலேயே தி.மு.க அரசுதான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்சமாக வரி விதிக்கிறது. ஆந்திரா டெல்லியில் உள்ள மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்கும்போது தமிழக அரசு மட்டும் விற்பனை வரியை குறைக்க மறுப்பானேன்? என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இதைக் கண்டித்து வரும் 27ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவிலேயே தி.மு.க அரசுதான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்சமாக வரி விதிக்கிறது.

டெல்லியில் 20 சதவிகிதமாக இருந்த விற்பனை வரியை, தற்பொழுது 12.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளனர். இதனால் விலை உயர்விற்கு முன்பு விற்ற விலையை விட இப்பொழுது டீசல் விலை இன்னும் குறைந்துள்ளது. ஆந்திர மாநிலமும் தற்போதைய விலை உயர்வால், விலை கூடுதலாக ஆகாமல் பார்த்துக் கொண்டுள்ளது. அப்படியிருக்க, அதிகபட்சம் வரி விதிக்கும் தி.மு.க அரசு மட்டும் விற்பனை வரியை குறைக்க மறுப்பானேன்?

தமிழ்நாடு அரசின் வரவு, செலவு திட்டத்தில் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிப்பதின் மூலம் ரூ.6320 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலை உயர்வால் கூடுதலாக எதிர்பாராத வகையில் ரூ.500 கோடி அளவிற்கு இந்த லாபம் உயரும். இந்த எதிர்பாராத லாபத்தையாவது தி.மு.க அரசு குறைக்க முன் வந்திருக்கலாம் அல்லவா?

பெட்ரோலியப் பொருட்களின் மீது இந்தியாவிலேயே அதிகபட்ச வரி விதித்தும், அவற்றை குறைக்கச் சொன்னால் ஏற்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து தே.மு.தி.க. தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

முதல் கட்டமாக வருகிற 27-ந் தேதி மதுரை மாநகரில் உள்ள மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில், தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், பொருளாளர் ஆர்.சுந்தரராஜன் முன்னிலையில், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரியைக் குறைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *