ஐதராபாத் : ஆந்திர சட்டசபை இடைத் தேர்தலில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, 11 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஒரு தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. காங்., மாநில தலைவர் ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
ஆந்திராவில் கடந்தாண்டு தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்து, போராட்டம் வெடித்தது. சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) தலைவர் சந்திரசேகர ராவ், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களில் பத்து பேர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் பா.ஜ.,வைச் சேர்ந்தவர். மற்றொருவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். இந்த 12 தொகுதிகளுக்கும் கடந்த 27ல் இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஐந்து தொகுதிகளுக்கு மட்டும் ஓட்டுச் சீட்டு முறை பின்பற்றப்பட்டது. மற்ற தொகுதிகளில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடந்தது. இந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ்., சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. தேர்தல் நடந்த 12 தொகுதிகளில் 11 தொகுதிகளில் டி.ஆர்.எஸ்., ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்தது. நிஜாமாபாத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் லஷ்மி நாராயணா முன்னணியில் இருந்தார்.
மன்செரியால் தொகுதியில் டி.ஆர். எஸ்., வேட்பாளர் 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், தெலுங்கு தேசம் வேட்பாளரை தோற்கடித்தார். சென்னூர், சிர்புர், வெமுலுவாடா தொகுதிகளிலும் டி.ஆர்.எஸ்., வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். சித்திபேட் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவின் மருமகன் ஹரீஸ் ராவ், 90 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், தன்னை அடுத்து வந்த தெலுங்கு தேசம் வேட்பாளரை தோற்கடித்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர். தர்மாபுரி தொகுதியில் டி.ஆர்.எஸ்., வேட்பாளர் ஈஸ்வர் வெற்றி பெற்றார்.
காங்., தலைவர் தோல்வி: நிஜாமாபாத் தொகுதியில் கடந்த முறை எம்.எல். ஏ.,வாக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த லட்சுமி நாராயணா, மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் ஆந்திர மாநில தலைவர் ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆந்திர மாநில அரசியலில் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸ், கடந்த தேர்தலிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிப்பதற்கு முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் இணைந்து, தீவிர தேர்தல் பணியாற்றிவர் ஸ்ரீநிவாஸ். இவரது தோல்வி, காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, தேர்தல் நடந்த 12 தொகுதிகளில் 11ல் டி.ஆர்.எஸ்.,சும், ஒரு தொகுதியில் பா.ஜ.,வும் வெற்றி பெற்றன. இதன்மூலம், தெலுங்கானா பகுதி தனது கோட்டை என, சந்திரசேகர ராவ் மீண்டும் நிரூபித்துள்ளார். ஆட்சி கையில் இருந்தாலும், ஆளும் கட்சியான காங்கிரசால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதேபோல், பாப்லி அணை விவகாரத்தில் தடாலடி போராட்டம் நடத்தி, மகாராஷ்டிராவில் கைதாகி பரபரப்பை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடுவின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அவரது தெலுங்கு தேசம் கட்சியும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு: தேர்தல் முடிவு குறித்து காங்., மூத்த தலைவரும், ஆந்திர முதல்வருமான ரோசய்யா கூறுகையில்,”மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்’என்றார். கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், “தெலுங்கானாவுக்கு ஆதரவாக மக்களின் உணர்வு தீவிரமாக இருப்பதால், எங்களால் வெற்றி பெற முடியவில்லை’ என்றார். தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வெற்றி, எதிர்பார்த்தது தான்’ என,தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply