வாழப்பாடி : வாழப்பாடி பகுதியில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை உணவுத் தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாழப்பாடி பகுதியில் அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதி, கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் வெள்ளாற்று படுகை கிராமங்கள் மற்றும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் ஆனை ஆகியவற்றில் பாசன வசதி பெறும் கிராமங்களில் 5,000 எக்டேர் பரப்பளவில் பாக்கு பயிரிடப்பட்டுள்ளது.
பாக்கு காய்களை அறுவடை செய்து வேகவைத்து பதப்படுத்தி எடுக்கப்படும் “கொட்டை பாக்கு’ சென்னை, செங்கற்பட்டு, கும்பகோணம், சீர்காழி, சிதம்பரம், புதுக்கோட்டை, விருதுநகர், பண்ருட்டி, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகிறது.
மரத்தில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை பதப்படுத்தி உணவுத் தட்டுகள் தயாரித்து விற்பனை செய்வதிலும் பாக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் பாக்கு தட்டுகளுக்கு மவுசு ஏற்பட்டது.
ஏற்றுமதிக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைத்ததால், பாக்கு தட்டு தயாரிக்கும் குடிசைத் தொழிலகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாக்கு தட்டு தயாரிக்கும் சிறு தொழில் அசுர வளர்ச்சி அடைந்தது. 400க்கும் மேற்பட்டோர் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.
தற்போது பாக்கு தட்டுகள் மட்டுமின்றி, பாக்கு மட்டைகளை பதப்படுத்தி டீ கோப்பைகள், டம்ளர்கள், பல்வேறு வடிவ கிண்ணங்கள், சிற்றுண்டி பிளேட்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் புதிய முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பாத்திரங்களுக்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உள்ளூரில் உலா வந்த பாக்கு மட்டை தட்டுகளுக்கு, வளர்ந்த நாடுகளில் கடும் கிராக்கி ஏற்பட்டு ஏற்றுமதிக்கு ஆர்டர் குவிந்து வருவதால், விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Leave a Reply