இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் செயல்பாடுகள் ஆப்கானிஸ்தானிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவியுள்ளன என, அமெரிக்க தளபதி மைக் முல்லன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் 19வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தளபதி மைக் முல்லன் கூறியதாவது: கடந்த 2008ம் ஆண்டிலிருந்து லஷ்கர்-இ-தொய்பாவை கண்காணித்து வருகிறேன். தற்போது இந்த அமைப்பின் செயல்பாடுகள் ஆப்கானிஸ்தானிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவியுள்ளன. பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பும் இந்த அமைப்புக்கு அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் பெருகி வருவது வருத்தம் அளிக்கிறது. இந்த அமைப்பால் பாதிக்கப்பட்ட நாடுகள், இந்த அமைப்பை ஒழிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது குறித்து பாகிஸ்தானிடம் சில முறை பேசியுள்ளேன். பல்வேறு நாடுகளில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகள் குறித்து எல்லாரும் வருத்தப்படத்தான் வேண்டும். ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதி தான், அல்-குவைதாவினரின் சொர்க்க பூமியாக உள்ளது. இந்த பகுதியில் தான் ஒசாமா பின்லாடனும், அவனது கூட்டாளி அல் ஜவாகிரியும் ஒளிந்துள்ளனர். மிகவும் ரகசியமான இடத்தில் இவர்கள் பதுங்கியுள்ளதால் அவர்களை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. கொலைவெறியுடன் செயல்படும் தலிபான்களின் ஹக்கானி பிரிவினரை ஒடுக்க, பாகிஸ்தான் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தேவையான உதவிகளை அளிக்கும். பாகிஸ்தான் தளபதி அஷ்பக் கயானியின் பதவிக்காலம் மேலும் மூன்றாண்டுகள் நீட்டிக்கப்பட்டதில் அமெரிக்காவின் வற்புறுத்தல் ஏதும் இல்லை. அமெரிக்க படைகள் ஏதும் பாகிஸ்தானில் ரகசியமாக இயங்கவில்லை. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளின் மீது தாக்குதல் நடத்துவது எங்களுக்கு கிடைத்த தனிப்பட்ட முறையிலான தகவலின் பேரில் நடத்தப்படுகிறது. இந்தியாவின் தகவலின் பேரில் நாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை. இவ்வாறு முல்லன் கூறினார்.
Leave a Reply