சென்னை: பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங் இன்று (ஜூலை 5ம் தேதி) துவங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில், பி.இ., – பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக துறைகளில் 3,050, அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளில் 4,200, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 4,019, தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து ஆயிரத்து 333, இதர கல்லூரிகளில் (சிப்பெட் சிக்ரி) 65 என, மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 167 இடங்கள் கவுன்சிலிங் மூலம் ஒதுக்கப்படுகின்றன.
இதற்கான கவுன்சிலிங் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. விளையாட்டு வீரர்களுக்கு 99 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 29 முதல் 3ம் தேதி வரை தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், 2,701 முதல் தலைமுறை பட்டதாரிகள் உட்பட மொத்தம் 3,781 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. இப்பிரிவில், காது கேளாதோர் 35, பார்வையற்றோர் 30, கை, கால் ஊனமுற்றோர் 312 என மொத்தம் 377 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கவுன்சிலிங்கை பார்வையிட்டார். கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் இரண்டாமிடம் பெற்ற ஹரிகரன் உள்ளிட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் வழங்கினார்.
நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகள் பிரிவில் மொத்தமுள்ள 3,000 இடங்களுக்கு 377 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 5ம் தேதி துவங்குகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் பந்த் நடந்தாலும், திட்டமிட்டபடி கவுன்சிலிங் நடக்கும். இன்றைய கவுன்சிலிங்கிற்கு 199 கட்-ஆப் மதிப்பெண் வரை பெற்ற 570 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட கவுன்சிலிங் 20ம் தேதி வரை நடக்கிறது. இதில் 169 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற 46 ஆயிரம் பேர் அழைக்கப்படுகின்றனர். எந்த கட்- ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, எப்போது கவுன்சிலிங் என்ற விவரம் அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் வராத மாணவர்களும், தங்களுக்கு கவுன்சிலிங் எப்போது என, இணையதளத்தில் பார்த்து, குறித்த நாளில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
கடந்த மாதம் 29ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை நடந்த, பிளஸ் 2 தொழில்நுட்ப மாணவர்களுக்கான கவுன்சிலிங்கில் 3,781 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ஏரோனாட்டிங் பிரிவில் 67, ஆட்டோமொபைல் 23, பயோடெக்னாலஜி 34, சிவில் 307, கம்ப்யூட்டர் சயின்ஸ் 720, இ.சி.இ., 861, இ.இ.இ., 552, எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமென்டேஷன் 72, ஐ.டி., 451, மெக்கானிக்கல் 596, இதர பாடங்களில் 98 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பொன்முடி கூறினார்.
Leave a Reply