காந்திநகர் : குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவரை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்ற வழக்கில், அம்மாநில உள்துறை அமைச்சர் அமீத் ஷாவிற்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது.
ஆனால், அவர் நேற்று ஆஜராகவில்லை. அதனால், ஆஜராக இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில், 2005, நவம்பரில் சொராபுதீன் ஷேக் என்பவர் என்கவுன்டர் மூலம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டது. முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல அவர் சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டது. ஆனால், பின்னர் நடந்த பல விசாரணைகளில், சொராபுதீன், போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டது தெரிந்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், சி.பி.ஐ., விசாரிக்கிறது. இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே மூத்த போலீஸ் அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரிகள் சிலரை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரும், அம்மாநில உள்துறை அமைச்சருமான அமீத் ஷா, அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது தெரிந்தது.
இதையடுத்து, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கு தொடர்பாக தங்கள் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, அமைச்சர் அமீத் ஷாவுக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். சொராபுதீன் கொலை வழக்கில் குஜராத் மாநில அமைச்சர் ஒருவருக்கு சம்மன் அனுப்பியது இதுவே முதல் முறை. ஆனாலும், அமைச்சர் அமீத் ஷா நேற்று ஆஜராகவில்லை. அதனால், இன்று மதியம் 1 மணிக்குள், சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என, இரண்டாவதாக ஒரு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னும் அமீத் ஷா ஆஜராகவில்லை எனில், மூன்றாவதாகவும், இறுதியாகவும் ஒரு சம்மன் அனுப்பப்படும். அதன்பின், தேடப்படும் நபராக அவர் அறிவிக்கப்பட்டு கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும். சமீபத்தில் நடந்த சில அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர் அமீத் ஷா கலந்து கொள்ளவில்லை. ஆனால், ஷா வக்கீல் மகேஷ் ஜெத்மலானி சி.பி.ஐ., முன் ஆஜராவார் என்று நேற்று மாலையில் தெரிவித்தார்.
Leave a Reply