போலி சான்றிதழ் வழக்கில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு? கைதானவரிடம் விசாரித்ததில் திடுக்கிடு

posted in: மற்றவை | 0

சென்னை : போலி மதிப்பெண் பட்டியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுத்துறையைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பாக மேலும் ஒருவர், போலீசிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங்கின் போது பிளஸ் 2 போலி மதிப்பெண் பட்டியலை கொடுத்த மாணவ, மாணவியர் குறித்த பட்டியல் வெளியானது. இந்த சம்பவம் கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. போலி மதிப்பெண் பட்டியல் கொடுத்து கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்கள் பெயர் பட்டியலை, அரசு தேர்வுகள் இயக்குனரகத்திடம், மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியது. இதில், முதற்கட்டமாக மருத்துவ படிப்பிற்காக போலி மதிப்பெண் சான்றிதழுடன் விண்ணப்பித்த 10 பேர் பட்டியலுடன், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீசிடம், தேர்வுத்துறை இயக்குனர் புகார் அளித்தார். இந்த புகார், மத்திய குற்றப்பிரிவிற்கு அனுப்பப்பட்டது. குற்றப்பிரிவில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு துணை கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில், கூடுதல் துணை கமிஷனர் வெங்கடேஸ்வரன் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப் பட்டன. தேர்வுத்துறை அளித்திருந்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ஒன்பது மாணவியர் மற்றும் ஒரு மாணவர், அவர்களது பெற்றோரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில், மாணவர்களுக்கு போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்து கொடுத்ததாக கல்லூரி கல்வி இயக்ககத்தைச் சேர்ந்த “ரிக்கார்டு கிளார்க்’ ஏகாம்பரம் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் திருவேங்கடத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, சென்னை போலீசில் தேர்வுத்துறை இயக்குனரகம் சார்பில், பொறியியல் படிப்பில் போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய 25 பேர் குறித்த புகார் அளிக்கப்பட்டது. இதில், 10 மாணவர்கள் மருத்துவத்திற்கு விண்ணப்பித்தவர்கள் என்பதால் மீதமுள்ள 15 பேரையும் தனிப்படைபோலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் திருவேங்கடத்தையும் கோர்ட் அனுமதிப்படி ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணையை துவக்கினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை திருவேங்கடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

திருவேங்கடம் தனது வாக்குமூலத்தில், தானும், ஏகாம்பரமும் இந்த விஷயத்தில் ஏஜன்ட்டாக மட்டுமே செயல்பட்டதாகவும், தங்களுக்கு ரகசிய குறியிடப்பட்ட காலி மதிப்பெண் பட்டியல்களை தந்து, எவ்வளவு மதிப்பெண் போட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை கூறியதே தேர்வுத் துறையில் உள்ள ஒரு முக்கிய அதிகாரியும், அவருக்கு நன்கு அறிமுகமான ஒரு நபரும், அவருடைய கூட்டாளியும் தான் என்று போலீசிடம் தெரிவித்துள்ளார். திருவேங்கடத்தின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ஏகாம்பரத்தையும் விரைவில் தங்கள் “கஸ்டடியில்’ எடுத்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பிருப்பதாக திருவேங்கடம் கூறியிருப்பதால் விரைவில் அரசு தேர்வுகள் துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவதாக கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள 15 மாணவர்களிடமும் போலீசார் தங்கள் விசாரணையை முடித்துவிட்டனர். அவர்களும், ஏற்கனவே கைது செய்யப் பட்டவர்களின் பெயர்களையே போலீசிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா கூறும் போது, “”மாணவர்களிடம் விசாரணை முடிந்து விட்டது. இதுதொடர்பாக மேலும் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து போலி மதிப்பெண் பட்டியல் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்றார். கிணறு தோண்ட பூதம் வெளிவந்த கதையாக, தற்போது போலி மதிப்பெண் பட்டியல் விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. தேர்வுகளை நடத்தும் சம்பந்தப்பட்ட துறையினரே இந்த முறைகேடுகளில் ஈடுபடுவது என்பது கஷ்டப்பட்டு படித்து நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களின் சாதனையை கேலி செய்வதாக உள்ளது என்பதே கல்வியாளர்கள் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *