சென்னை : பொறியியல் படிப்பில் சேரும் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், கல்லூரியில் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை;
அக்கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப் பட்டிருந்தாலும், பல கல்லூரிகள் மாணவர்களிடம் கல்விக்கட்டணத்தையும் செலுத்துமாறு வற்புறுத்தி வருகின்றன.
இந்த ஆண்டு முதல் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பில் சேரமாணவர்கள் அதிக ஆர்வம் செலுத்தினர். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்காக இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து 133 பேர் விண்ணப்பங்களை பெற்றனர். அதில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். இவர்களில் 49 ஆயிரத்து 143 பேர் ஆண்கள், 28 ஆயிரத்து 943 பேர் பெண்கள் என, 78 ஆயிரத்து 86 பேர் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் பொறியியல் கவுன்சிலிங்கில், இதுவரை 75 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதில் 42 ஆயிரம் மாணவர்கள் (56 சதவீதம்) குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டதால், கவுன்சிலிங் கிற்கு வராதவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது.
தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் கணேசன், கடந்த ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மட்டும் அரசே ஏற்கும். அரசு நடத்தும் ஒற்றைச்சாளர கவுன்சிலிங்கில் கலந்துகொண்டு அரசு, அரசு உதவிபெறும், பல்கலைக் கழக கல்லூரிகள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வர்கள், பல்கலைக் கழக பதிவாளர்கள் மற்றும் தனியார் தொழிற்கல்வி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அம்மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அக்கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்த துறையின் கீழ்வருகிறதோ, அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் இவ்வாறு அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில் சேர்க்கை ஆணை கிடைத்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் கல்லூரிக்கு சென்றால், அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. பல கல்லூரிகள் மாணவர்களிடம் கல்விக்கட்டணத்தையும் கட்ட வேண்டும் என கூறுகின்றன. தற்போது பணத்தை கட்டி விடுமாறும், அரசாங்கத்திடமிருந்து பணம் கிடைத்த பிறகு, அப்பணத்தை மாணவர்களுக்கு திருப்பித்தருவதாகவும் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள் அண்ணா பல்கலையில் 5,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்கள் கல்லூரியில் கட்டணத்தை செலுத்தும்போது, 5,000 ரூபாயை கழித்துக் கொண்டு மீதமுள்ள தொகையை செலுத்தினால் போதும். ஆனால், பல கல்லூரிகள் அண்ணா பல்கலையில் கட்டிய 5,000 ரூபாயையும் செலுத்த வேண்டும் என வற்புறுத்துகின்றன.
Leave a Reply