புதுடில்லி:நக்சல்கள் அழைப்பு விடுத்துள்ள, “பந்த்’தின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடக்காதபடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தும்படி மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமுள்ள மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்தில், ஆந்திராவின் அடிலாபாத் மாவட்டத்தில் சர்க்கப்பள்ளி கிராமத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் செருகுரி ராஜ்குமார் என்ற ஆசாத், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று முதல் இரண்டு நாள், “பந்த்’துக்கு நக்லைட்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நாட்களில் மக்கள் ரயில்களில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனால் கவலை அடைந்துள்ள மத்திய அரசு, ரயில்கள், தண்டவாளங்கள், ரயில்வேயின் சொத்துக்கள், பொது இடங்கள், சந்தைகள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தும்படி, மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநில அரசுகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.குறிப்பாக, சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களின் போக்குவரத்தைக் கண்காணிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. ரயில்வேயும் நிலவரத்தைக் கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முதலில் பயணிகள் இல்லாத, “பைலட் ரயில்கள்’ முன்னோட்டமாக விடப்பட்டுப் பின் பயணிகள் ரயில் விடப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Leave a Reply