ரயில் டிரைவர்கள் தூங்காமல் தவிர்க்க “பயோ மெட்ரிக்’ மோதிரம் தயார்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : ரயில் விபத்தை தடுக்கும் வகையில் ரயில் டிரைவர்களுக்கு, “பயோ மெட்ரிக்’ முறையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மோதிரம் போன்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை அணிந்து கொள்ளும் டிரைவர்கள், இரவு நேரங்களில் கண் அசந்தால் உடனடியாக அவர்களை விழிப்படைய வைக்கும்; தூக்கம் தொடர்ந்தால், தானியங்கி “பிரேக்’ மூலம் ரயில் உடனடியாக நின்று விடும். பெரும் விபத்துகளை சந்தித்து வரும் ரயில்வே துறையில், இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கோரமான ரயில் விபத்தில், 60க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொழில்நுட்பக் காரணங்களால் இந்த விபத்து நடந்ததா அல்லது டிரைவரின் கவனக்குறைவு காரணமா அல்லது இதன் பின்னணியில் சதி காரணமாக இருக்குமா என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், ரயில் விபத்தை தடுக்கும் வகையில், “பயோ மெட்ரிக்’ முறையில் ரயில் டிரைவர்களுக்காக பிரத்யேகமாக மோதிரம் போன்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: ரயில் விபத்துகளில் 80 சதவீதம் மனித தவறுகளாலேயே நடக்கின்றன. கடந்த 19ம் தேதி, மேற்கு வங்கம் சயிந்தியா ரயில் நிலையத்தில் நடந்த விபத்து இதற்கு ஒரு உதாரணம். சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தில் ஏற்கனவே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்தும், சிவப்பு சிக்னல் வழங்கப்பட்டு, நிலைய மேலாளர் மூலம் வாக்கி டாக்கியில் ரயில் டிரைவருக்கு தகவல் தெரிவித்தும், 60 கி.மீ., வேகத்தில் வந்த ரயில், பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு ரயில் மீது மோதி 66 பேரை பலி வாங்கியது. இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இப்புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, ரயில் டிரைவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து அவர்களுக்கு அபாய எச்சரிக்கையை தரும். ஆகஸ்ட் மாதம் முதல் சோதனை அடிப்படையில் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக தெற்கு மத்திய ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்படுகிறது; பின், படிப்படியாக மற்ற ரயில்வே மண்டலங்களிலும் நடைமுறைபடுத்தப்படும்.

கிழக்கு கடற்கரை ரயில்வேயில் சரக்கு ரயில் டிரைவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது. டிரைவர்களின் உடலில் பொருத்தப்படும் இந்த கருவி, டிரைவர்கள் தூங்கி விட்டாலோ அல்லது விபத்து ஏற்படும் சூழல் உருவானாலோ அதைப் பற்றிய அபாய ஒலியை எழுப்பும். இதையும் டிரைவர்கள் சரிவர கேட்க முடியாத பட்சத்தில், அவசர கால பிரேக்குகள் தானாகவே இயங்கி, ரயிலை நிறுத்திவிடும். இதன் மூலம் விபத்துகள் பெருமளவில் குறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த எச்சரிக்கை கட்டுப்பாடு கருவி, முதற்கட்டமாக 3,200 எலக்ட்ரிக் ரயில் இன்ஜின்களில் பணியாற்றும் டிரைவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *