ரூ.9 ஆயிரம் கோடியில் உருவான டெல்லி விமான நிலையம் பிரதமரால் திறந்து வைப்பு

posted in: அரசியல் | 0

04_001உலகத்திலேயே 6-வது இடத்தை பிடித்து சாதனை படைக்கும் ரூ.9 ஆயிரம் கோடியில் உருவான டெல்லி விமான நிலையத்தை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார்.


டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தினுள் மூன்றாவது விமானப் போக்குவரத்து முனையம் (தனி விமான நிலையம்) அமைக்கப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களை கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த முனையம் 37 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக, ரூ.9 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தின் 80 சதவீத பகுதிகள், கண்ணாடி மற்றும் மெட்டல்களால் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் மூன்று விமான ஓடுபாதைகளை பயன்படுத்த முடியும்.

ஆண்டுக்கு சுமார் மூன்றரை கோடி பயணிகளை வரவேற்று அனுப்பி வைக்கும் வகையில் வசதிகள் உள்ளன. 4 கி.மீ. தூரத்துக்கு பரந்து விரிந்துள்ள, இந்த மூன்றாவது விமான போக்குவரத்து முனையமானது, உலகின் 6-வது பெரிய விமான நிலையம் ஆகும்.

லவுஞ்சுகள், ஓட்டல்கள், பார்கள் உட்பட பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 ஆயிரம் கார்களை நிறுத்தும் வகையில் அடுக்குமாடி `பார்க்கிங்’ வசதியும் உள்ளது. ஒரு மணி நேரத்தில் 1300 பயணிகளின் சூட்கேஸ் மற்றும் பைகளை கையாளும் வகையில் கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விமான நிலையத்தில் இருந்து 16-ந் தேதி முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும். இந்த விமான நிலையத்தை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய மன்மோகன்சிங் “பூகோள ரீதியாக, முக்கியமான சர்வதேச விமான போக்குவரத்து பாதையாக இந்தியா உள்ளது. வரும் ஆண்டுகளில், டெல்லி மற்றும் மும்பையை மையமாக கொண்டு விமான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். மேலும், 2020-ம் ஆண்டுக்குள் இந்திய விமான போக்குவரத்து துறையில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கும்” என்றார்.

விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி பிரபுல் படேல், டெல்லி முதல்-மந்திரி ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *