1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 26.44 தான்: வரிகள் ரூ.25

டெல்லி: ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை ரூ. 26.44 தான் என்று பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் கூறினார்.

மாநிலங்களவையில் அவர் பேசுகையில்,

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 51.45க்கு விற்கப்படுகிறது. இதில் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை ரூ. 26.44 காசுகள் மட்டுமே. ஆனால், அதன் மீதான வரி ரூ.25.01 ஆகும்.

அதேபோல ஒரு லிட்டர் டீசல் ரூ. 37.62க்கு விற்கப்படுகிறது. டீசலின் அடக்க விலை ரூ. 26.63 மட்டுமே. இதற்கு விதிக்கப்படும் வரி ரூ. 10.99 ஆகும்.

இறக்குமதி வரி, உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றை மத்திய அரசும், மாநில அரசுகள் பிற வரிகளையும் விதிக்கின்றன என்றார்.

விலை உயர்வு நியாயமானதே-தியோரா:

இந் நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா,

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெயின் விலையை குறைந்த அளவே மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த விஷயத்தில் அரசு நியாயமாக நடந்து கொண்டுள்ளது.

மக்களின் நலனில் அரசுக்கு அக்கறையில்லாமல் இல்லை. கிரீத் பாரிக் கமிட்டி மண்ணெண்ணெயின் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு 100 ரூபாயும் உயர்த்த பரிந்துரைத்தது.

ஆனால் மண்ணெண்ணெயின் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு 35 ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளோம்.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு தொடர்ந்து மானியம் அளித்த போதும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுமை குறையவில்லை.

எண்ணெய் நிறுவனங்களின் இக்கட்டான நிலைமையை கருத்தில் கொண்டுதான் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலையுயர்வை அடுத்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதிசுமை ஓரளவுக்கு குறைந்துள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி அதிகமாக உள்ளன. சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீது 33 சதவீதம் வரை விற்பனை வரி விதிக்கப்படுகிறது. இதைக் குறைக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *