546 தமிழாசிரியர் விரைவில் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

posted in: கல்வி | 0

சென்னை : “விரைவில் 546 தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த 56 மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்கப்படும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளில் பாகுபாடு காட்டாமல், தங்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத் திறனாளிகள்( உடல் ஊனமுற்றோர்) சென்னையில் மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதுபோன்றே தமிழாசிரியர்களும் பணியிடங்களை நிரப்பக்கோரி, இரண்டு நாள் உண்ணாவிரதம் நடத்தினர். இவர்களது கோரிக்கைகள் குறித்தும், பயனாளிகள் தேர்வு குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள விளக்கம்: தமிழகத்தில் உள்ள 5,580 தமிழ்வழி, இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 168 மாற்றுத் திறனாளிகளும், 2009-10ம் ஆண்டில், தமிழ் வழியில் உள்ள 1,943 பணியிடங்களுக்கு, 57 மாற்றுத் திறனாளிகள் என, மொத்தம் 225 மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆதிதிராவிட நலத்துறை மூலமாக 2008-09ம் ஆண்டிற்கான 354 பணியிடங்களில் 11 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். நடப்பு நிதியாண்டில் நிரப்ப உள்ள 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில், 3 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 52 மாற்றுத் திறனாளிகளும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழாசிரியர்கள்: கடந்த நான்கு ஆண்டுகளில் 1,359 தமிழாசிரியர்கள் (பட்டதாரி ஆசிரியர் நிலை) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2009-10ம் ஆண்டில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் 200 தமிழாசிரியர் பணியிடங்களும், நடப்பு ஆண்டில் பள்ளி கல்வித்துறைக்கு 346 தமிழாசிரியர்கள் என மொத்தம் 546 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தோரை தேர்வு செய்யும் பணியை வாரியம் மேற்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் விடுபட்டோர் விவரம் கோரப்பட்டுள்ளது. பட்டியல் கிடைத்தவுடன் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின், 546 தமிழாசிரியர் பணியிடங்களுக்கும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *