காலே : டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை சுழல் மன்னன் முத்தையா முரளிதரன். காலே டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்திய இவர் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.
இவரது அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க, காலே டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற முன்னிலை பெற்றது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி காலேவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 520, இந்தியா 276 ரன்கள் எடுத்தன. “பாலோ-ஆன்’ பெற்ற இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. லட்சுமண் (9), தோனி (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
தோனி ஏமாற்றம்: நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அதிகம் எதிர்பார்க்கப் பட்ட தோனி (4), மலிங்கா வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஹர்பஜன் (8), முரளிதரன் சுழலில் வீழ்ந்தார். பின்னர் களமிறங்கிய மிதுன் (25) ஆறுதல் அளித்தார். அடுத்து வந்த இஷாந்த் சர்மா நல்ல ஒத்துழைப்பு கொடுக்க, அரை சதம் கடந்தார் லட்சுமண். 69 ரன்கள் எடுத்த லட்சுமண், எதிர்பாராத விதமாக ரன் அவுட் செய்யப்பட்டார். கடைசி கட்டத்தில் சற்று நேரம் தாக்குப் பிடித்த ஓஜா (13) முரளிதரன் சுழலில் வெளியேறினார். இது டெஸ்ட் அரங்கில் முரளிதரன் கைப்பற்றும் 800 வது விக்கெட்டாக அமைந்தது. 115. 4 ஓவரில் “ஆல்-அவுட்டான’ இந்திய அணி 338 ரன்கள் எடுத்தது. இஷாந்த் (31) அவுட்டாகாமல் இருந்தார்.
தில்ஷன் அதிரடி : 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இலங்கை. தில்ஷன், பரணவிதனா துவக்கம் தந்தனர். இந்திய பந்து வீச்சாளர்கள் ஏமாற்றம் அளிக்க, அதிரடியாக ஆடி ரன் குவித்தார் தில்ஷன். இவர் டெஸ்ட் அரங்கில் 14 வது அரை சதம் கடந்தார். ஹர்பஜன் பந்து வீச்சில் தில்ஷன் ஒரு இமாலய சிக்சர் அடிக்க, 14.1 ஓவர் முடிவில் 96 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி. தில்ஷன் (68), பரணவிதனா (23) அவுட்டாகாமல் இருந்தனர். இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகனாக மலிங்கா தேர்வு செய்யப் பட்டார்.
முரளி சாதனை: தனது கடைசி டெஸ்ட் போட்டியில், புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் 8 விக்கெட்டுகள் (முதல் இன்னிங்ஸ் -5, இரண்டாவது இன்னிங்ஸ் -3) கைப்பற்றிய இவர், டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார். காலே டெஸ்டின் கடைசி நாளான நேற்று, கடைசி விக்கெட்டான இந்தியாவின் பிரக்யான் ஓஜாவை அவுட்டாக்கிய இவர், இந்த இலக்கை எட்டினார்.
7 வது முறை: நேற்றைய போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் 7 வது முறையாக இப்பெருமை பெற்றுள்ளது. தவிர, இந்தியாவுக்கு எதிராக இது 2 வது முறை. இதற்கு முன் கடந்த 2001 ம் ஆண்டு காலேவில் நடந்த போட்டியில், இலங்கை அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
சாதனைகள் பல….:
* டெஸ்ட் (133 போட்டி, 800 விக்.,) மற்றும் ஒரு நாள் அரங்கில் (337 போட்டி, 515 விக்.,) அதிக விக்கெட்டுகள்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (67) 5 விக்கெட்டுகள் .
* டெஸ்ட் போட்டிகளில், அதிக முறை (22) 10 விக் கெட்டுகள்.
* டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒவ் வொரு அணிக்கு எதிராகவும் 50 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்தி சாதனை.
* டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் (10) விருது.
Leave a Reply