கோபிச்செட்டிப்பாளையம்: தனது வேலையைப் பார்ப்பதற்காக ஒரு ஆசிரியையை சட்டவிரோதமாக நியமித்து அவர் மூலம் பாடம் நடத்தி வந்துள்ளார் ஒரு உதவித் தலைமை ஆசிரியர்.
ஆசிரியர் பணி புனிதமானது என்பார்கள். அப்படித்தான் அந்தக் காலத்து ஆசிரியர்கள் கருதினார்கள், பணியாற்றினார்கள். ஆனால் இன்று ஆசிரியர்களைப் பார்த்து பொதுமக்கள் நக்கலாக சிரிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகள்தான்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் இப்படித்தான் ஒரு உதவித் தலைமை ஆசிரியர் தனது வேலையை தான் செய்யாமல், இன்னொரு ஆளைப் போட்டு செய்து பெரும் மோசடி செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கோபி நகரசபை ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 490 மாணவர்கள் [^] படித்து வருகிறார்கள். இங்கு வணிகவியல் ஆசிரியராக கடந்த 31 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் வேலுச்சாமி. இவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
ஆசிரியர் வேலுச்சாமி தினமும் பள்ளிக்கூடத்துக்கு வந்து வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்குப் போய் விடுவாராம். அதை விடக் கொடுமையாக, லதா என்ற ஆசிரியை ஒருவரை நியமித்து தனக்கு பதிலாக அவர் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.
இதுகுறித்துத் தகவல் கிடைத்தவுடன், அந்தப் பள்ளிக்கு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொன்குமார் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, ஆசிரிய-ஆசிரியைகளின் வருகை பதிவேட்டை அவர் ஆய்வு செய்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.எம்.நடராஜமூர்த்தி மற்றும் பள்ளிக்கூட ஊழியர்களிடம் விசாரணை [^] நடத்தினார். அதைத்தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். மாணவர்களின் நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்.
நோட்டுப் புத்தகத்தில், ஆசிரியர் வேலுச்சாமிக்கு பதிலாக பெண் ஆசிரியை லதா கையெழுத்து போட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த நோட்டுக்களை முதன்மை கல்வி அதிகாரி கைப்பற்றினார்.
தலைமை ஆசிரியர் வி.எம்.நடராஜமூர்த்தி மற்றும் மாணவ-மாணவிகளிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கி கொண்டார்.
இதுகுறித்து பொன் குமார் கூறுகையில், கோபி நகரசபை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வணிகவியல் ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியருமான வேலுச்சாமி என்பவர் தனக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியையை நியமித்து பாடம் நடத்துவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தது. அதன்பேரில், விசாரணை நடத்தப்பட்டது.
மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களுக்கு வணிகவியல் பாடத்தை நடத்துவது லதா என்ற ஆசிரியைதான் என்று மாணவர்கள் கூறினார்கள்.
நான் பள்ளிக்கூடத்துக்கு விசாரணை நடத்த சென்ற போது, ஆசிரியர் வேலுச்சாமிக்கு வகுப்பு இருந்தது. ஆனால், அவர் வகுப்பில் பாடம் நடத்தாமல் தலைமை ஆசிரியரின் அறையில் இருந்தார். அவருக்கு பதிலாக ஆசிரியை லதா என்பவர் பாடம் நடத்தி உள்ளார். நான் சென்றதும், அவர் வகுப்பை விட்டு வெளியே தப்பி ஓடி விட்டார்.
எனவே, ஆசிரியர் வேலுச்சாமி தானாகவே ஆசிரியையை நியமித்து கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். எனவே, இந்த சம்பவத்துக்கும், அவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
கோபி கல்வி மாவட்ட அதிகாரியின் விசாரணை அறிக்கை வந்தவுடன் ஆசிரியர் வேலுச்சாமியின் மீது துறை ரீதியான நடவடிக்கை [^] எடுப்பதற்கு பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.
அவுட்சோர்சிங் ரேஞ்சுக்கு ஆசிரியர்கள் போயிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
Leave a Reply