ஏசி’, வாஷிங் மிஷின் பயன்படுத்துவோருக்கே கட்டண உயர்வு:முதல்வர்

posted in: அரசியல் | 0

சென்னை : “வீடுகளுக்கு “ஏசி’, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி போன்ற நவீன வசதிகளை அதிகமாக பயன்படுத்துவோருக்குத் தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில்தான், மின் கட்டணம் குறைவாக உள்ளது’ என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மின் உற்பத்தி, கட்டணம் தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட சில கட்சியினரும் சொல்லியிருக்கிற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதால் தான், நான்காண்டு காலமாக மின்வெட்டினால் ஏற்படக் கூடிய தொல்லைகளை சமாளித்து, மின் கட்டண உயர்வை தமிழக அரசு தவிர்த்து வந்தது.மின் உற்பத்தி என்பது முதல் நாள் இரவு அறிவித்து, மறுநாள் காலையில் உற்பத்தியைத் துவங்கிவிட முடியாது. மின் உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. மின்கட்டண உயர்வு அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் என்று சொல்வது தவறான தகவல்.இரு மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும், வீடுகளின் மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி, கைத்தறி, விவசாயம், பொது வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை.தமிழகத்தில் மொத்தமுள்ள ஒரு கோடியே 49 லட்சத்து 86 ஆயிரம் மின் இணைப்புகளில், இரு மாதங்களுக்கு 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சத்து ஐந்தாயிரம் ஆகும்.

இரு மாதங்களுக்கு 201 யூனிட் முதல், 400 யூனிட் வரை 10 லட்சத்து 52 ஆயிரம் பேர்களும், 401 யூனிட் முதல், 600 யூனிட் வரை ஆறு லட்சத்து 10 ஆயிரம் பேர்களும் உள்ளனர். இவர்களுக்கு தற்போது எந்தவித மின்கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.இரு மாதங்களுக்கு 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் மூன்று லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு மட்டும், ஒரு யூனிட்டுக்கு, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் வீடுகளுக்கு “ஏசி’, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி போன்ற நவீன வசதிகளை அதிகமாக பயன்படுத்துபவர்கள். இவர்களுக்கும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று சிலர் சொல்லியிருக்கின்றனர் .

தமிழகத்தில் உள்ள 11 லட்சத்து 98 ஆயிரம் குடிசைகளுக்கான மின் இணைப்புகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும், அரசு மின்வாரியத்திற்கு மானியமாக வழங்கிவிடுகிறது. அதனால், அனைத்து குடிசைவாசிகளுக்கும் மின் கட்டணமே கிடையாது என்பது தான் உண்மை.தேசிய அளவில் மின் பகிர்மானத்தின் போது, 38 சதவீதம் மின் இழப்பு ஏற்படுகிறது. டில்லிக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில்தான் மின் இழப்பு குறைவாக உள்ளது. தற்போதுள்ள மின் இழப்பைக் கூட, சரிக்கட்ட தமிழக அரசு புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.தற்போதைய அறிவிப்பில், சிறிய கடைகளை வைத்துள்ள வணிகர்களுக்கு இதுவரை யூனிட் ஒன்றுக்கு ரூ.5.30 என வசூலிக்கப்பட்ட கட்டணம், இன்று முதல் ரூ.4.30 என குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசைப் பொறுத்தவரை, கட்டணத்தை உயர்த்தினால் உயர்த்தியது தான் என்ற அளவில் இல்லாமல், நிலைமை முன்னேறினால், கட்டணத்தையும் குறைக்கும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.இதிலே கூட, ஒழுங்குமுறை ஆணையம் இரு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்திய நிலையில், நான் அவர்களை வலியுறுத்தி, இரு மாதங்களுக்கு 600 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு எந்த கட்டண உயர்வும் செய்யப்படவேண்டியதில்லை என்று கேட்டுக் கொண்டு, அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தேன்.மின்சார பயன்பாட்டு யூனிட் ஒன்றுக்கு கேரளாவில் ரூ.3.39, மகாராஷ்டிராவில் ரூ.4.83, மேற்கு வங்கத்தில் ரூ.3.57, உத்தரப்பிரதேசத்தில் ரூ.3.15, கர்நாடகாவில் ரூ.4.02, ஆந்திராவில் ரூ.3.51, குஜராத்தில் ரூ.3.64, டில்லியில் ரூ.3.68 என்ற அளவில் தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்காக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, யூனிட்டுக்கு ரூ.2.85 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *