காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது

புதுடில்லி : காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான மைதானங்களை கட்டி முடிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிந்தது. ஆனாலும், ஒரு மைதானம் கூட முழுமையாக தயாராகவில்லை. இதனால், போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இதற்கான பயிற்சி அரங்கம், நீச்சல் மையம் அமைப்பது உள்ளிட்ட 16 திட்டங்களில் கோடிக்கணக்கில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்தது. இது பற்றி மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தூதரகம் மறுப்பு: தவிர, பிரிட்டனை சேர்ந்த ஏ.எம். பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எவ்வித “டெண்டரும்’ கோராமல், காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டி சுமார் 3.27 கோடி ரூபாய் செலுத்தியது தொடர்பாகவும் சர்ச்சை வெடித்தது. இதனை மறுத்த, காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி, இந்திய தூதரகம் பரிந்துரை செய்ததன் பேரில் தான், ஏ.எம்.பிலிம்ஸ் நிறுவனத்திடம் காமன்வெல்த் ஜோதி துவக்க நிகழ்ச்சிக்கான பொறுப்பை ஒப்படைத்ததாக கூறினார். கல்மாடியின் கருத்தை, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. “தங்களது அலுவலகத்தில் மிகவும் கீழ்நிலையில் பணிபுரியும் ராஜூ செபாஸ்டியனுக்கு பரிந்துரை செய்யும் உரிமை இல்லை’ என்று, விளக்கம் அளித்துள்ளது. இவ்விஷயத்தில் தான் முறைப்படி செயல்பட்டதாக கல்மாடி கூறியுள்ளார்.

கெடு முடிந்தது: இப்படி கல்மாடி-இந்திய தூதரகம் மோதிக் கொண்டிருக்கும் நிலையில், மைதானங்களை கட்டி முடிப்பதற்கான கெடு முடிந்து விட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி மத்திய பொதுப் பணித் துறை மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் சேர்ந்து மைதானங்கள் மற்றும் போட்டி நடக்கும் இடங்களை ஒருங்கிணைப்பு கமிட்டியிடம் நேற்று முறைப்படி ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், தல்கோத்ரா மைதானம், கர்னி சிங் மைதானம், யமுனா விளையாட்டு காம்ப்ளக்ஸ் போன்றவற்றில் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மழை பெய்வதால், ஆங்காங்கே தண்ணீர் கட்டி, குளம் போல காட்சி அளிக்கின்றன. போட்டிகள் துவங்க, இன்னும் இரண்டு மாதமே இருப்பதால், காமன் வெல்த் விளையாட்டு நடக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அவல நிலை: சுமார் 175 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தல்கோத்ரா மைதானத்தில் “டைல்ஸ்’ பதிக்கும் பணிகள் பாதியில் நிற்கின்றன. சில இடங்களில் “டைல்ஸ்’ உடைந்து காணப்படுகிறது. இரும்பு கம்பிகள் சிதறிக் கிடக்கின்றன. படிகள் அரைகுறையாக கட்டப்பட்டு உள்ளன. நுழைவாயில் கதவுகள் கூட சரியாக அமைக்கப்படவில்லை. வீரர், வீராங்கனைகளுக்கான “டிரஸ்சிங் ரூம்’ சரக்குகள் வைக்கும் அறை போல மட்டமாக உள்ளது. துப்பாக்கி சுடுதலுக்கான கர்னி சிங் மைதானம் மழை காரணமாக வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சேறும் சகதியுமாக இருப்பதால், நடக்க கூட முடியவில்லையாம். இம்மைதானத் துக்கான பணிகள் சுமார் 150 கோடி செலவில் 2008, அக்., 25ம் தேதி துவங்கின. பணிகள் எல்லாம் கடந்த மாதமே முடிந்து விட்டதாக அமைப்பாளர்கள் சொன்னார்கள். ஆனால், மழை பெய்ததும், இவர்களது சாயம் வெளுத்து விட்டது.

“மீடியா’வுக்கு தடை: அடுத்து, யமுனா ஸ்போர்ட்ஸ் காம்ப் ளக்சின் நிலைமை பரிதாபமாக உள்ளது. இங்கு தான் டேபிள் டென்னிஸ், வில்வித்தை போன்ற போட்டிகள் நடக்க உள்ளன. இதனை கடந்த மார்ச் மாதமே மத்திய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி திறந்து வைத்தார். ஆனால், சேதமடைந்த மேற்கூரையின் சில பகுதிகளை தற்போது தான் சரி செய்து கொண்டுள்ளனர். இந்த விளையாட்டு காம்ப்ளக்சிற்கு வெளியேயும் நிலைமை மோசமாக உள்ளது. இந்த மூன்று முக்கிய மைதானங்களுக்குள் செல்ல “மீடியா’வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. “போட்டோ’ எடுக்கவும் அனுமதி கிடையாது.

உண்மை அம்பலம்: நேற்று அவசர அவசரமாக நேரு மைதானத்தில் அமைந்துள்ள பளுதூக்குதலுக்கான அரங்கத்தை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் திறந்து வைத்தார். இதிலும் பணிகள் நிறைவடையவில்லை. மேற்கூரையில்(பால்ஸ் சீலிங்) வெடிப்பு காணப்பட்டது. கழிப் பறைகள் பக்கம் போக முடியாத அளவுக்கு நாற்றம் அடித்தது. அரங்கத்தின் அருகே டைல்ஸ், மண் போன்றவை குவிந்து கிடந்தன. வெளியே மழை காரணமாக குளம் போல் தண்ணீர் தேங்கியிருந்தன. இப்படி மைதானங்கள் முழுமையாக தயாராகாதது, காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்களுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

தண்டனை நிச்சயம் : காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான மைதானங்களை கட்டுவதில் பெருமளவு ஊழல் நடந்து உள்ளது. விதிமுறைகள் மீறப் பட்டு உள்ளன. “டெண்டரில்’ குறிப்பிட்ட தொகையை, அரசு அதிகாரிகளின் துணையோடு திருத்தம் செய்துஉள்ளனர். இதனால் ஒப்பந்தக்காரர்களுக்கு கூடுதலாக பணம் கிடைத்துள்ளது. இதனை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணை அம்பலப்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில்,””நிதிமுறைகேடு பற்றி லஞ்ச ஒழிப்பு ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவ்விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக் கப்படுவர். யாரும் தப்ப முடியாது,”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *