தமிழகத்தில் ரூ.13 ஆயிரம் கோடி முதலீட்டில் 3 புதிய தொழிற்சாலைகள்

posted in: அரசியல் | 0

சென்னை : தமிழகத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மூன்று புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

இத்தொழிற்சாலைகளால் 8,600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் எரிவாயுத் தேவைகளை நிறைவு செய்ய, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து, எண்ணூர் துறைமுகத்துக்கு அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் டன் கையாளும், திரவநிலை எரிவாயு முனையம் அமைக்க உள்ளன. அதிலிருந்து இரண்டு கோடி கனமீட்டர் எரிவாயுவை குழாய்கள் மூலம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும், உரத் தொழிற்சாலைகளுக்கும், பிற தொழிற்சாலைகளுக்கும், போக்குவரத்து மற்றும் நகர்ப்புற எரிவாயு தேவைகளுக்கும் வினியோகிக்க, புதிய தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மின் உற்பத்தி திட்டத்தையும் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்துக்கான ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. ஒப்பந்தத்தில், “டிட்கோ’ நிறுவனம் சார்பில் தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜிவ் ரஞ்சனும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக அதன் தலைவர் பன்சல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து பன்சல் நிருபர்களிடம் கூறும் போது, “”ஏற்கனவே இரண்டு முனையங்கள் வடமாநிலங்களில் உள்ளன. மூன்றாவது முனையம் கொச்சியில் அமைக்கப்படுகிறது. தற்போது கையெழுத்தாகியுள்ளது நான்காவது முனையத்துக்கானது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் இதற்கான ஒப்புதல் கிடைத்து விடும். “”அதன் பின், நான்கு ஆண்டுகளில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இதற்கு தேவையான 250 ஏக்கர் நிலத்தை தர தமிழக அரசு சம்மதித்துள்ளது. கிழக்கு கடலோரப் பகுதியில் அமைக்கப்படும் முதல் முனையம் இது,” என்றார். அடுத்ததாக, வீடியோகான் நிறுவனம் ஐந்தாண்டுகளில் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கவுள்ள தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. “எல்சிடி பிளாஸ்மா டிவி’ உள்ளிட்ட பல வகையான மின்னணுப் பொருட்களையும், வீட்டு உபயோகப் பொருட்களையும், அவற்றுக்கான உதிரி பாகங்களையும் தயாரிக்க, “யூனிட்டி அப்ளையன்சஸ்’ என்ற நிறுவனம், மானாமதுரை சிப்காட் தொழில் பூங்காவில் இத்தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜிவ் ரஞ்சன், யூனிட்டி அப்ளையன்சஸ் இயக்குனர் பிரதீப்குமார் தூத் ஆகியோர் கையெழுத்திட்டனர். மூன்றாவதாக, ஸ்ரீபெரும்புதூரில் ஜே.கே.டயர்ஸ் நிறுவனம் புதிய தொழிற்சாலை அமைத்தல் குறித்த ஒப்பந்தம். ஐந்தாண்டுகளில் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் 600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை வழங்க இருக்கும் இந்த புதிய தொழிற்சாலைக்கான ஒப்பந்தமும், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இதில், தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜிவ் ரஞ்சன், ஜே.கே.டயர்ஸ் நிறுவனத் தலைவர் அருண் பஜோரியா ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியின் போது, துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, சிப்காட் மேலாண்மை இயக்குனர் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி அமைப்பின் செயல் துணைத் தலைவர் வேல்முருகன் உடனிருந்தனர்.

ஒப்பந்தம் குறித்து ஜே.கே.டயர்ஸ் இயக்குனர் ரகுபதி சிங்கானியா கூறும் போது, “”டிரக் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான ரேடியல் டயர் இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். முதல் டயர், அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளிவரத் துவங்கும். ஆண்டுக்கு 86 லட்சம் டிரக் டயர்களும், 50 லட்சம் பயணிகள் வாகன டயர்களும் தயாரிக்கும் அளவுக்கு உற்பத்தி திறன் கொண்டது,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *