புதுடில்லி: தேர்தலில் ஓட்டுப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க வைப்பதற்காக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை இதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுத்த தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
மேலும், தேர்தலுக்காக அளிக்கப்படும் விடுமுறையை பயன்படுத்தி, நகர்புறங்களைச் சேர்ந்தவர்கள் உல்லாச சுற்றுப் பயணம் போவதை தடுக்கும் வகையில், இனிமேல் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தேர்தல் நடக்காதவாறு ஏற்பாடுகளைச் செய்யவும் தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. புதிய தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள குரேஷி, தேர்தல் கமிஷன் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு அவசியம் ஏற்பட வேண்டும். தேர்தலில் ஓட்டளிப்பதன் மூலம், தங்களின் ஜனநாயக கடமையை அவர்கள் ஆற்ற வேண்டும். தேர்தலில் அனைத்து தரப்பினரையும் ஓட்டளிக்க வைக்கும் வகையில், தேர்தல் கமிஷன் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, இளைஞர்களுக்கு தேர்தலில் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து புரிய வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை வைத்து, இது குறித்த பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009ல் ஜார்க்கண்ட்டில் சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியை வைத்து, “தேர்தலில் அனைவரும் பங்கேற்று ஓட்டளிக்க வேண்டும்’ என, பிரசாரம் செய்ய வைத்தோம். தோனியின் பிரசாரம் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதன் பயனாக, அந்த தேர்தலில் 58 சதவீதம் ஓட்டுகள் பதிவாயின. ஜார்க்கண்ட்டில் இதற்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில் 51 சதவீத ஓட்டுகள் தான் பதிவாகியிருந்தன. டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கும் இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை வரும் தேர்தல்களிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டள்ளது. இந்தாண்டில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தாண்டில் மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு அதிக அளவில் ஓட்டுகள் பதிவாவதற்கு இந்த புதிய திட்டம் பயன் அளிக்கும் என, எதிர்பார்க்கிறோம். பெருநகரங்களில் வசிக்கும் பலர் ஓட்டளிப்பது இல்லை. அத்துடன் மட்டுமல்லாமல், “நான் ஓட்டுப் போடுவது இல்லை’ என, கூறுவதை “பேஷன்’ஆகவும் பின்பற்றுகின்றனர். மேலும் சிலர், தேர்தலின் போது விடுமுறை விடப்படுவதை தவறாக பயன்படுத்துகின்றனர். திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைகளில் தேர்தல் வைத்தால், திங்களுக்கு முந்தய நாள் ஞாயிறு என்பதால், அன்றும் விடுமுறையாக இருக்கும். அதேபோல் வெள்ளிக் கிழமை தேர்தல் என்றால், அதற்கு அடுத்த சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் விடுமுறையாக இருக்கும். சேர்ந்தாற்போல், இரண்டு அல்லது மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதால், சிலர் குடும்பத்துடன் வெளியூர்களுக்கு உல்லாச சுற்றுப் பயணம் சென்று விடுகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், இனிமேல் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தேர்தல் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில், பீகாரில் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் கமிஷன் முழு வீச்சில் இறங்கியுள்ளது. தேர்தல் கமிஷனர்கள் மூன்று பேரும் அந்த மாநிலத்துக்கு சென்று, ஆய்வு நடத்தவுள்ளோம். இதேபோல், மேற்கு வங்கத்துக்கும் விரைவில் செல்லவுள்ளோம். அங்கு மாவோயிஸ்ட் பிரச்னை இருப்பதால், தேர்தல் அமைதியாக நடப்பதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யவுள்ளோம். அதேநேரத்தில், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடக்காது என்பதையும் மீண்டும் உறுதியாக தெரிவிக்கிறோம். சட்டசபையின் பதவிக் காலம் முடிவதற்கு ஆறு மாதம் இருக்கும்போது தான், தேர்தல் தொடர்பான வேலைகளை தேர்தல் கமிஷன் கையில் எடுக்கும். இவ்வாறு குரேஷி கூறினார்.
Leave a Reply