புதுடில்லி: ‘இந்தியாவில் 99 சதவீத கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பான மனு மீது, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கங்குலி, சிங்வி தலைமையிலான பெஞ்ச், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலிடம் விளக்கம் கேட்டது.
அதற்கு பதிலளித்த ஆசிரியர் கல்வி கவுன்சில் உறுப்பினர் செயலர் ஹாசிப் அகமது தாக்கல் செய்த மனுவில், முறைகேடுகள் கல்லூரிகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட் கூறியதாவது: மாணவர்கள் கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்து ஏமாந்து போய், அங்கீகாரம் பெறாத கல்லூரிகளிலும், போலியான கல்லூரிகளிலும் லட்சக்கணக்கான பணத்தை கொடுத்து சேர்கின்றனர். ஆனால், அவர்களுக்கு முறையான கல்வி கிடைக்காமல், எதிர்காலம் பாழாகிறது.
ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு கூட, அரசு உரிய நிவாரணம் வழங்குகிறது. அது போல, இத்தகைய கல்லூரிகளால் எதிர்காலம் பாழான மாணவர்களுக்கு, அக்கல்லூரிகள் இரண்டு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். எனவே மாணவர்கள் கவர்ச்சிகளை கண்டு ஏமாறாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்தியாவில், 99 சதவீத தனியார் கல்லூரிகள் அடிப்படை வசதிகளும், உள்கட்டமைப்பு வசதிகளும் இன்றி உள்ளன. அவை, ஏதோ கடை நடத்துவது போல, மாணவர்களிடம் பணம் பறித்து கொண்டு, அவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கின்றன. இத்தகைய கல்லூரிகள், நாட்டின் மேற்கு பகுதிகளில் அதிகம் உள்ளன. இதிலுள்ள 1,200 கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலிடம் உரிய அங்கீகாரம் பெறாதவை.
கடந்த 10 ஆண்டுகளாக இத்தகைய மோசடிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. எனவே, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், உரிய அதிகாரிகளையும், குழுவையும் அமைத்து, அந்த கல்லூரிகளை கண்காணிக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதற்கு உரிய முக்கியத்துவத்தை தர வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை, சிபாரிசுகளின் அடிப்படையில் நிரப்புவதை தவிர்த்து விட்டு, திறமையான ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்புவதன் மூலம், எதிர்காலத்தில், சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
Leave a Reply