தூத்துக்குடி: தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலைய கட்டுமானப் பணியை, துணை முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்.
தூத்துக்குடி துறைமுகத்தின் 127 எக்டேர் நிலத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து 4,909.54 கோடி ரூபாயில், தலா 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டு யூனிட் அனல் மின் நிலையம் (மொத்தம் 1,000 மெகா வாட்) அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்நிலையத்திற்கான பங்கு முதலீட்டில் 89 சதவீதத்தை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும், 11 சதவீதத்தை தமிழ்நாடு மின்சார வாரியமும் அளிக்கவுள்ளன. 275 மீட்டர் அதி உயர புகை போக்கி, மெகா குளிரூட்டு கோபுரங்கள் கட்டுமானப் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த மின் நிலையத்திற்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய நாள் ஒன்றுக்கு, நான்கு மில்லியன் கேலன் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படவுள்ளது. இம்மின் நிலையம் கடல் அருகில் அமைவதால், வாயு மூலம் குளிரூட்டப்படும் மின் தடுப்பான்கள் கொண்ட உள்ளரங்கு மின் கட்டமைப்பு கழனி (ஐணஞீணிணிணூ எஐகு குதீடிtஞிட தூச்ணூஞீ) நிறுவப்பட்டு வருகிறது. அனைத்து பிரிவுகளின் கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன. இதுவரை 10 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இம்மின் நிலையத்தின் முதல் யூனிட் மார்ச் 2012லும், இரண்டாம் யூனிட் ஆகஸ்ட் 2012லும் மின் உற்பத்தியை துவங்கவுள்ளன. இதில், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பெரும்பகுதி தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், தமிழகத்தில் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். ஸ்டாலின் நாளை ஆய்வு: நாளை அரசு விழாக்களில் கலந்து கொள்ள தூத்துக்குடி வரும் துணை முதல்வர் ஸ்டாலின், இந்த அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply